பக்கம் எண் :

166நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

சென்றவனும், பாரதப்போர் செற்றானும் - பாரதப் போரை நடக்கச்செய்து முடித்தவனும் ஆனவன், இச்சேய் கண்டாய் - இவ்வரசிளங்குமரனே ஆவான்.

(க - து.) ‘ஏ ! பெண்ணரசி ! இங்கு வீற்றிருப்போன், தன் கூரிய அம்பைக் கடலில் அலம்பியோனும், இசைச் சங்கத்திற்குத் தலைமையோனும், பாண்டவர்க்குத் தூது சென்றோனும், பாரதப்போரை வென்றவனுமாகிய யதுகுல வேந்தனாவான் ; இவனைக் காண்’ என்றாள் என்பதாம்.

(வி - ரை.) இங்குக் கூறப்பெற்றவன் வடமதுரையை ஆண்டு. வந்த யதுகுலத் தரசனாவான். ஆழிவடியம்பலம்ப நின்றவனும் ஏழிசைநூற் சங்கத் திருந்தவனும் யதுகுலத்தானாகிய ஹைஹயன் மரபில் தோன்றிய கார்த்தவீரியார்ச்சுனன் ஆவான் ; இவன் இராவணனைச் சிறைப்படுத்தி இருந்தபோது அவனை மீட்கவந்த அரக்கர்களைக் கொன்று கடலிலே அம்புகளைக் கழுவினானென்றும் மற்றொரு காலத்தில் நாரதமுனிக்கும் விசுவாவசு என்னும் கந்தருவனுக்கும் இசையில் வாது நேர்ந்தபோது, அவ்விசைச்சங்கத்தில் தலைவனாக இருந்தானென்றும் கூறுப. நீள்வீசும்பின் நற்றேவர் தூது நடந்தவனும் பாரதப்போர் செற்றவனும் கண்ணபிரானாவன். இதனைப் 1‘பஞ்சவர்க்குத் தூது நடந்தானை’ எனச் சிலப்பதிகாரத்தில் கூறுவதும் காண்க. அக் கார்த்தவீரியார்ச்சுனன் கண்ணபிரான் வழித்தோன்றலாக இருக்கின்றானாதலான் இவ் யது வேந்தனுக்கு அவர்கள் செய்த அரும்பெற்ற செயல்களையெல்லாம் இவன்மேல் ஏற்றிக் கூறப்பெற்றது.

இதற்குப் பிறரெல்லாம் இச்செயல்கள் யாவும் பாண்டி மன்னனுக்கு ஏற்றிக்கூறிப் பொருள் விரிப்பர். பாண்டியனைக் குறித்துப், ‘போர்வாய் வடி வேலால்’ (135) என்று தொடங்கும் பாட்டில் கூறியிருத்தலானும் அதற்கு அடுத்தபாட்டில் சேரநாட்டு மன்னனைக் குறித்துக் கூறியிருத்தலானும் அதன்பின் மீண்டும் பாண்டியனைக் கூறினாரென்றால் ‘கூறியது கூறல்’ என்னும் குற்றத்தின் பாற்படுதலானும் அவ்வாறு பொருள் கூறல் பொருந்தாமை யறிக.

நின்றான் இருந்தான் நடந்தான் சென்றான் என்னும் இறந்தகால வினையாலணையும் பெயர்கள் சேய் என்னம் பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்தன. (137)

1. சிலப்பதி, 17, படர்க்கை : 3.