|
சேடி, தமயந்திக்குக் குருநில மன்னனைக்
காட்டல்
145. தெரியில் இவன்கண்டாய்
செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன்.
(இ - ள்.) தெரியில் இவன் - நீ
தெரிந்துகொள்ள விரும்பினால் இவ்வரசன், செம்
கழுநீர் மொட்டை - செங்குவளை அரும்பை, அரவின்
பசும் தலைஎன்று அஞ்சி - பாம்பின் பசிய
தலையென்றெண்ணி அச்சங்கொண்டு, பிள்ளைக் குருகு
இரங்க - நாரையின் குஞ்சுகள் வாய்விட்டுக் கதற,
பேதைபுள் இரவு எல்லாம் தாலாட்டும் - (தாயாகிய)
பெண்ணாரையானவை இரவுப்பொழுது எல்லாம்
தாலாட்டிக் கொண்டிருக்கின்ற, வள்ளை குருநாடர்
மன் - வள்ளைக் கொடிகள் படர்ந்திருக்கின்ற
(மருதவேலி சூழ்ந்த வளப்பமிக்க) குருநாட்டில்
வாழ்வோர்க்கு அரசனாவான், கண்டாய் - நீ
அறிவாயாக.
(க - து.) ‘தமயந்தி ! இவனை நீ அறிய
விரும்பினால், இவன், செங்கழுநீர் அரும்பைப்
பாம்பின் தலையென்றஞ்சிக் கதறுகின்ற
குஞ்சுகளுக்குத் தாய் நாரை அதை நீக்க இரவெல்லாம்
தாலாட்டுகின்ற வளமுள்ள மருத நிலம் சூழ்ந்த
குருநாட்டு மக்களுக்கு அரசனாவான் ; நீ அறிவாயாக’
என்பதாம்.
(வி - ரை.) செங்கழுநீர் மொட்டு -
செங்குவளையின் மலரும் பருவத்திலுள்ள பேரரும்பு. அது
நீர்க்குமேல் தோன்றுவதைத் தம் பிள்ளைமைத்
தன்மையால் அரவென மருண்டு அஞ்சி நாரைக் குஞ்சுகள்
கத்த, அதை அடக்கி அக்குஞ்சுகளைத் தூங்க
வைத்தற்குத் தாய் நாரைகள் இரவுமுழுதும் தாலாட்டுந்
தன்மையுடையது குருநாடு எனவே, மருதநிலஞ்சூழ்ந்த
நீர்வளமிக்க நாடு என அவன் நாட்டின் பெருமையைச்
சிறப்பித்தவாறாம். அதனான் நாடு விளைவுமிக்க
தென்பதையும் சுட்டிக் காட்டியதுமாம். என்னை ?
1‘தள்ளா விளையுளும் கக்காரும்
தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு’
என்பராகலானென்க.
1. திருக்குறள் : 739.
|