பக்கம் எண் :

172நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

விரைந்து மேலெழுந்த அக்கோலின் முள், கமுகின் பாளையைக் கீற அதிலுள்ள தேன், செந்நெற் பயிரின் தாள்களின்மேல் வழிந்தோடுகின்ற பாஞ்சால நாட்டு வேந்தனாவான்’ என்பதாம்.

(வி - ரை.) விடம் : நஞ்சு. நஞ்சின் தன்மை அதனை உண்டாரை உயிர் மாய்ப்பது. அதுபோல் வேலும் தன்னை எதிர்த்தாரைக் கொன்றொழிக்கும் தன்மையுடையதாதலால், ‘விடக்கதிர்வேல்’ என்றார். காளை போல்வானைக் காளையென்றது ஆகுபெயர். தூண்டிற்கோலின் முட்பட்டுக் கமுக மடலினின்றும் தேன் வழிந்து நெற்பயிர்களின் தாளில் பாய்ந்தோடுமென்றதனால் நாட்டின் நீர்வளனும் நிலவளனும் வானம் வறக்காது மழை வளந்தரும் அவன்றன் செங்கோற் சிறப்பும் கொற்றமும் கூறியவாறாம். மழை பெய்தற்கும் நாடு வளத்திற்கும் காரணம் செங்கோலே என்பதனை,

1கோனிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரி வறங்கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்’ என்னும்

மணிமேகலை அடிகளானும்,

2இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு’

என்னும் தேவர் திருமறையானும் உணர்க. (142)

சேடி, தமயந்திக்குக் கோசல நாட்டு மன்னனைக் காட்டல்

150. அன்னம் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெல் அரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டும் குலக்கோ சலநாடன்
தேனிருந்த சொல்லாயிச் சேய்.

(இ - ள்.) தேன் இருந்த சொல்லாய் - தேனின் இனிமை தங்கிய சொற்களையுடைய தமயந்தியே ! இச் சேய் - இவ்வரசிளங்

1. மணிமேகலை, 7 : 8-12. 2. திருக்குறள் : 545.