|
குமரன், அன்னம் துயில் எழுப்ப - அன்னப்
பறவையானது (காலையில்) தம்மைத் தூக்கத்தினின்று
எழும்படி ஒலிசெய்ய, (அதனால் எழுந்துசென்று) அம்
தாமரை வயலில் - அழகிய தாமரைகள் படர்ந்துள்ள
வயலில், செம்நெல் அரிவார் - செந்நெற்
கதிர்களை அறுக்கின்றவர்கள், சினை ஆமை
வன்முதுகில் - கருக்கொண்டிருக்கும் ஆமையின் வலிய
முதுகு ஓட்டில், கூன் இரும்பு தீட்டும் - வளைவான
அரிவாட்களைத் தீட்டுகின்ற, குலக்கோசல நாடன் -
சிறப்புமிக்க கோசலநாட்டு வேந்தனாவான்.
(க - து.) தேனினும் இனிக்கும்
இன்சொல்லாய் ! அன்னப்பறவைகள்
விடியற்காலையில் தம்மைத் துயிலெழுப்ப
எழுந்துசென்று நெல்லரிவோர் தம் அரிவாள்களைக்
கருக்கொண்டு ஆமைகளின் முதுகோட்டின்மீது
தீட்டுகின்ற வளம்பொருந்திய கோசலநாட்டு
வேந்தன் இவன் என்பதாம்.
(வி - ரை.) விளைந்து
மடிந்துகிடக்கும் செந்நெற்கதிர்களை
வைகறைப்போதில் பனிப்பதத்தில் அறுப்பதற்கு
வயற்பக்கங்களில் படுத்துறங்குகின்றவர்களை,
அன்னப்பறவைகள் ஒலிசெய்து எழச் செய்து
நெற்கதிரை அறுப்பதற்கு ஆயத்தப்படுத்துகின்றன.
எனவே, நீர்வளத்தால் என்றும் மாறாது வாழ்கின்ற
நீர்வாழ் பறவை முதலிய இனங்களைக் கொண்டது
கோசலநாடு என நாட்டின் சிறப்பைக் கூறி, மன்னன்
பெருமையைச் சேடி தமயந்திக்கு உணர்த்தியவாறாம்.
சினையாமை: சூற் கொண்டுள்ள ஆமை. கூன்
இரும்பு-வளைவுள்ள இரும்பு எனக் கருக்கு அரிவாளை
உணர்த்தலால் கருவி ஆகுபெயர். ஆமை முதுகில்
அரிவாள் தீட்டுதலை,
1‘நெல்லரி தொழுவர் கூர்வாள்
மழுங்கின்
பின்னை மறத்தோடு அரியக்கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும்
நெல்லமல் புரவின் இலங்கை’
எனப் புறத்தும் வருதல் கண்டின்புறுக. வன்
முதுகு : பண்புத்தொகை. தேன் அதன் சுவையைக்
குறித்தலால் ஆகுபெயர். தேன் இருத்தல்: என்றும்
மாறாது சுவையாகத் தேன்போல் இனிமையாகத்
தோன்றல். (143)
1. புறம்: 379.
|