|
சேடி, தமயந்திக்கு மகதநாட்டு மன்னனைக்
காட்டல்
151. புண்டரிகம் தீயெரிவ
போல்விரியப் பூம்புகைபோல்
வண்டிரியும் தெண்ணீர் மகதர்கோன் - எண்திசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம்
பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய்.
(இ - ள்.) இச் சேய் - இவ்வரசிளங்
குமரன் எண் திசையில் போர் வேந்தர் கண்டு அறியா
- எட்டுத் திசைகளிலுமுள்ள போரில் வல்லுநரான
மன்னர்களும் பார்த்தறியாத, பொன் ஆவம் பின்
உடைய தேர்வேந்தன் - பொன்னால் இயன்ற அம்பறாத்
தூணியைத் தன் முதுகிற்பூண்ட தேர் ஊர்ந்து
செல்கின்ற மன்னனானவன், புண்டரிகம்
தீஎரிவபோல் விரிய - செந்தாமரை மலர்கள்
நெருப்பு எரிவனபோல் மலர்ந்திருக்க, பூம்
புகைபோல் வண்டு இரியும் - அந்நெருப்பிலிருந்து
மேலேழுந்து கிளம்பும் புகையைப் போன்று கரியநிற
வண்டுக்கூட்டங்கள் பறந்தாடிக்கொண்டிருக்கும்,
தெள்நீர் மகதர்கோன் - தெளிந்த நீர்வளமுள்ள
மகத நாட்டாருடைய வேந்தனாவான், கண்டாய் -
காண்பாயாக.
(க - து.) ‘ஏ கயற்கண்ணி ! இந்நின்ற
இவர், செந்தாமரை மலர்கள் நெருப்புப் போல் மலர,
அதிலிருந்து மேலெழும்பும் புகைபோல் கருநிற
வண்டுகள் மேலெழுந்து பறந்து திரிகின்ற
நீர்வளமுள்ள மகதநாட்டுக்கு வேந்தனாவான்’
என்பதாம்.
(வி - ரை.) புண்டரிகம் - தாமரை :
வடசொல். இது பொதுப் பெயராகத் தாமரையை
குறிக்குமாயினும் ‘தீ எரிவ’ என்னும் அடையினால்
செந்தாமரை யென்று பொருள் கூறப்பட்டது.
நீர்ப்பெருக்குள்ள இடங்கள் தோறும் செந்தாமரை
படர்ந்து மலர்ந்து கிடப்பதால் அவைகள்
காண்பார்க்கு நெருப்பு எரிவனபோல்
தோன்றுகின்றன. அவைகளின் தேனை உண்டுகளித்த
கரியநிற வண்டுகள் மேலெழுந்து பறந்து திரிவன,
அந்நெருப்பில் தோன்றும் புகைக் கூட்டம்போல்
காட்சிதந்து இன்பக்கடலில் ஆழ்த்துகின்றன.
இவ்வளவுக்குங் காரணமாக நின்றது, நீரின் தண்ணிய
வளனன்றோ ? அதனை ஆசிரியர் ‘தெண்ணீர்’ என்ற
சொல்லாற் கூறிச் சுருங்கச் சொல்லி
விளங்கவைத்தார். ‘தெண்ணீர் வயற்றொண்டை
நன்னா’ டென்றார் பிறரும்,
|