பக்கம் எண் :

மூலமும் உரையும்177

பூதம் ஊட்டுவதாய்ச் சிறந்து அமைந்திருத்தலை ஓர்க. இதனால் அந்நாடு தாய்மையன்பு சான்றது என இறைச்சி, உள்ளுறையாகவும் கொள்க. (145)

சேடி, தமயந்திக்குக் கலிங்கநாட்டு மன்னனைக் காட்டல்

153. வெள்வாளைக் காணைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.

(இ - ள்.) தண் தெரியல் தேர்வேந்தன் தான் - குறிர்ச்சியுள்ள மலர்மாலையணிந்த தேரூரும் வேந்தனாகிய இவன், மேதிக் குலம் - எருமைக் கூட்டங்கள், வெள்வாளைக் காளைமீன் எழுப்ப-வெண்ணிறம் பொருந்திய வாளை இளமீன்களை (விழுந்து) கிளப்புவதனால் (அவைகள்), கள்வார்ந்த தாமரையின் காடு உழக்கி - தேன் ஒழுகிய தாமரை மலர்களையெல்லாம் கிண்டி, புள்ளோடு வண்டு இரிய செல்லும் - பறவைகளுடன் வண்டுகளும் அஞ்சியோடும்படி பாய்ந்தோடுகின்ற, மணிநீர்க் கலிங்கர்கோன்-வற்றாத நீர்வளமுள்ள கலிங்கநாட்டில் வாழ்வார்க்கு வேந்தனாவான்.

(க - து.) ‘(ஏ கொடியிடையாய் !) இவ் வேந்தன், எருமை இனங்கள் நீரில் விழுந்து வாளைமீன்களைக் கிளப்ப, அவைகள் தாமரைக்காட்டை உழக்கி, வண்டுகளும் பறவைகளும் அஞ்சியோடும்படி பாய்ந்து செல்கின்ற கலிங்க நாட்டுக்கும் அரசனாவான்’ என்பதாம்.

(வி - ரை.) வெள்வாளை - வெள்ளைநிறம் பொருந்திய வாளைமீன். காளைமீன் - காளைபோன்ற துடிப்புள்ள மீன் என உவமத் தொகையாகக் கொள்ளலுமாம். எழுப்ப : காரணப் பொருட்டாய் வந்த செய்வெனெச்சம். தாமரையின் காடு: தாமரை மிகுதி, அஃது இங்கே தாமரை மலரை உணர்த்திற்று; முதலாகு பெயர். புள் - பறவை. வண்டு - வண்டினங்கள். தாமரை மலரில் வாழ்வன பறவைகளும் வண்டினமும் ஆகலான், வாளை மீன் உழக்க அவைகள் அஞ்சிப் பறந்து செல்வவாயின. எனவே, கலிங்கநாட்டு நீர்வளங் குறித்தவாறாம். இக்கருத்தோடொப்ப,

1‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து

1. அகம் : 46.
ந. - 12