கூர்முள் வேலிக் கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய
அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர’
என, அகத்தினும் வருதல் காண்க.
மணிநீர் - வற்றாதநீர். ‘1மணி நீரும் மண்ணும்
மலையும்’ என்னும் குறட்குப் பரிமேலழகியார் ‘வற்றாதநீ’
ரெனப் பொருள் கொண்டார் : அன்றி மணிபோன்று
தெளிந்த நீரென்று கோடலுமாம். ‘2மாசறத் தெளிந்த
மணிநீர் இலஞ்சி’ என்றார், மணிமேகலையாசிரியாரும்.(146)
சேடி, தமயந்திக்கு கேகயநாட்டு
மன்னனைக் காட்டல்
154. அங்கை வரிவளையாய் ஆழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய்க் - கங்கையிடைச்
சேல்குளிக்கும் கேகயர்கோன் தெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து.
(இ - ள்.) வரிவளை அம் கையாய் -
கீற்றினையுடைய வளையலணிந்த அழகிய
கையினையுடையாய், தெவ் ஆடல் கைவரை மேல் -
பகைவருடைய வலிமை பொருந்திய யானைகளின்மேல்,
வேல் குளிக்க நின்றான் இவ் வேந்து - வேற்படை பாய
(அதனை விட்டுப் போர்க்களத்தில் வென்று)
நின்றவனான இம் மன்னன், ஆழிதிரை கொணர்ந்த -
கடலின் அலையானது கொண்டுவந்து ஒதுக்கிய, செம்கண்
மகரத்தை - சிவந்த கண்களையுடைய சுறாமீனினை,
தீண்டிபோய் கங்கை இடை - தொட்டுச் சென்று
கங்கையாற்றின் நீரில், சேல்குளிக்கும்
கேகயர்கோன் - கெண்டை மீன்கள் நீந்திச்
செல்கின்ற கேகய நாட்டினர்க்கு வேந்தனாவன்.
(க - து.) ‘ஏ அங்கை வரிவளையாய் !
இவ் வேந்தன், கடலலைகள் ஒதுக்கிக் கொண்டுவந்த
சுறாமீனின்மேல் கெண்டை மீன்கள் உராய்ந்து
சென்று கங்கைநீரில் குளிக்கின்ற நீர்வளமிக்க
கேகயநாட்டுக்கு மன்னனாவான் காண்பாயாக’
என்பதாம்.
(வி - ரை.) கங்கையாறு கடலிற்
பாய்வதால், அக்கடலின் அலை கங்கை நீரோடு
எதிர்த்துப் பாயுங்கால் கடலிலுள்ள சுறா
1. திருக்குறள் : 742. 2. மணிமேகலை, 4 : 7.
|