பக்கம் எண் :

184நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

அழகு தருகின்ற அழகுடைய பொன் வளையலணிந்த தமயந்தியைப் பார்த்ததால், நாண்உக்கு நெஞ்சு உடைய-வெட்கம் கெட்டு மனம் வாட்டமுறும்படி நின்ற, நீள்நிலத்து நல்வேந்தர்-நீண்ட இம் மண்ணுலகில் சிறந்த மன்னர்களில், மற்று எவர் வாராதார் - வேறு எவர் தாம் வாராதிருந்தவர்கள் (எல்லோரும் வந்துள்ளனர்), பொன்தே நளன் உருவாய்ப்போந்து - அழகிய தேரினையுடைய நளமன்னன் உருவங்கொண்டு, வானவரும் வந்து இருந்தார் - தேவர்களும்கூட அச்சுயம்வர மண்டபத்துக்கு வந்திருந்தார்கள். (எனின், பிறர் வந்திருந்தது கூறவேண்டா என்றபடி.)

(க - து.) தமயந்தியின் சுயம்வரத்துக்காக தேவர்கள்கூட நளனுருவங் கொண்டு வந்திருந்தார்களெனின், பூவுலக மன்னர்களில் யார்தான் வாராமலிருப்பார்கள்? (எல்லோரும் வந்திருந்தனர்) என்பதாம்.

(வி - ரை.) உலகில் சிலருக்கு இயற்கையாகவே அழகு உண்டு ; பலர்க்கு செயற்கையால் அழகு சிறப்பப் புனைவர் ; அவ்வழகு ஊட்டுதற்கு அணி ஆடை மணப்பொருள் முதலியன இன்றியமையாது வேண்டப்பெறும். ஆனால் இங்கே தமயந்தி இயற்கையாகப் புறவழகும் அகஅழகும் நிரம்பிய ஆரணங்கு. இவட்குத் திருமணம் நிகழ்த்த எண்ணிய தாய் தந்தையர் செயற்கை முறையில் பற்பல அணிகளைத் திருத்தமுறப் பூட்டி அணிசெய்தனர். அவ்வணிகள் இவள்தன் அழகுமிக்க உறுப்பைச் சேர்ந்தவுடன் அவைகளே தனியழகு பெற்றுமிளிர்ந்தன இதனை ஆசிரியர் ‘பூணுக்கழகளிக்கும் பொற்றொடி’ என நயம்படக் கூறினார்.

இவ்வாறு காவற்சனகன் கன்னியாகிய சீதைக்கு அழகு படுத்தியதைக் கம்பநாடர்,

1‘அமிழ்தினைச் சுவைசெய் தென்ன அழகினுக் கழகு செய்தார்’

என்று வியப்பும் சுவையுந்தோன்றக் கூறினார். இவள்தன் அழகைக்கண்ட அரசிளங்குமரர்கள், தம் அழகுகள் யாவும் ஞாயிற்றின் முன் மின்மினி போன்று சிறப்படையாமை குறித்துத் தாமே வெட்கங்கொண்டு நிற்பர் என்பாராய்க் ‘கண்டக்கால் நாண்உக்கு நெஞ்சுடைய நல்வேந்தர்’ என்றார். ‘நாண் கொள்ளும் வேந்தர்’ என்னாது, ‘நெஞ்சுடைய வேந்தர்’ என்றது, நெஞ்சுக்கு நடுநிலையுண்டு ; அது, ஒவ்வாத செயல் செய்ய ஒருவன்

1. கம்பரா, கோலங்காண் : 3.