பக்கம் எண் :

மூலமும் உரையும்187

மகளை யொத்தாளாகிய தமயந்தி, ஆங்கு - அவ்விடத்தில், கண் இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால் - கண்கள் இமைகொட்டுவதாலும் கால்கள் மண்ணிற் படுவதாலும், வண்ண மலர்மாலை வாடுதலால் - அழகிய மலர்மாலைகள் வதங்குவதாலும், எண்ணி நளன் தன்னை அறிந்தாள்-எண்ணிப்பார்த்து நளமன்னனைத் தெரிந்துகொண்டாள்.

(க - து.) தமயந்தியானவள், கண்கள் இமைத்தலாலும் கால்கள் நிலத்தில் படிதலாலும் அணிந்த மலர்மாலை வாடுதலாலும் ஆராய்ந்தறிந்து நளன் இன்னானென அறிந்துகொண்டாள் என்பதாம்.

(வி - ரை.) தேவர்கட்குக் கண் இமை பொருந்துவதில்லை ; இதனாலே தேவர்க்கு ‘இமையவர்’ என்னும் பெயருமுண்டு. கால்கள் நிலத்திற் படுவதில்லை; மலர்மாலை வாட்டமுறுவதில்லை யென்பார். கண்கள் இமைகொட்டுவதில்லை யென்பதனை,

1எல்லை மூவைந்து நாள்கள் உளவென
இமைக்குங் கண்ணும்’

என்றார் சிந்தாமணியினும். திருக்கோவையாரில் வரும் தலைவன், தலைவியைக் கண்டான் ; அவன், திருமகளோ கலைமகளோ வான் மகளோ என ஐயுற்று நின்றகாலை, ஐயம் நீங்கற்குக் கண் இமைத்தலானும் கால் நிலத்திற்றோய்தலானும் மாலை கருகலானும் நிலமகளே - மானிட மங்கையே யென உணர்ந்தான் என்று கூற வந்தகாலை,

2 ......படைக் கண் இமைக்கும்,
தோயும் நிலத்தடி தூய்மலர் வாடும் தொழுதிரங்கி
ஆயும் மனனே அணங்கல்லள்’

என உணர்ந்தானென்று கூறுதலானறிக.

தாமரை விரும்பு - தாமரை மலரும் திருமகளாக ஏற்றுக் கொள்ள அவாவி நிற்கும், எனப் பொருள் கூறலும் பொருந்தும். இவள் தன் அழகைச் சிறப்பித்தவாறாம். ‘3காணிற் குவளை கவிழ்ந்து நிலநோக்கும்’ என்னுங் கருத்துப்போற் கொள்க. விருப்பமில்லாத அஃறிணைப் பொருளை விரும்புமென்று கூறுவது ஓர் இலக்கணை வழக்கு. ‘4உறுப்புடையது போல்’ என்னும் தொல்காப்பிய விதியால் விரும்பாத தாமரையை விரும்புவது போற் கூறப்பட்டது எனக் கொள்க. (153)

1. சிந்தாமணி : 2. திருக்கோவையார் : 3.
3. திருக்குறள் : 1114. 4. தொல், பொருளியல் : 2.