தமயந்தி, நளமன்னனுக்கு மணமாலை
சூட்டுதல்
161. விண்ணரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலம் களிகூர - மன்னரசர்
வன்மாலை தம்மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன்.
(இ - ள்.) விண் அரசர் எல்லாரும் -
வானுலக நாட்டு மன்னர்கள் யாவரும், வெள்கி மனம்
சுளிக்க - நாணமுற்று மனம் வருத்தமுறவும், கண் அகல்
ஞாலம் களிகூர - இடம் விரிந்த இம் மண்ணுலகமக்கள்
யாவரும் மகிழ்ச்சி மிகவும், மண் அரசர் தம்
மனத்தே வன்மாலை சூட - பூவுலக மன்னர்கள் தம்
நெஞ்சத்தில் மிக்க மயக்கமடையவும், பொன்
வயவேந்தை பொன்மாலை சூட்டினாள் - திருமகளை
யொத்த தமயந்தியானவள் வெற்றிமிக்க
நளமன்னனுக்கு அழகிய சுயம்வர மலர்மாலையை அவன்
கழுத்தில் அணிந்தாள்.
(க - து.) தமயந்தியானவள்,
விண்ணரசர் வெட்கமுற, உலக மாந்தர் மிக்க
மகிழ்ச்சிகொள்ள, மண்ணக அரசர் தம் மனத்தே
மிக்க மயக்கங்கொள்ள, நளமன்னன்னுக்குச் சுயம்வர
மலர்மண மாலையைச் சூட்டினாள் என்பதாம்.
(வி - ரை.) விண்ணரசர் -
தேவருலகிலுள்ள இந்திரன் முதலிய தேவர்கள்.
வெள்குதல் - நாணமுறுதல். ஞாலம் - மண்ணுலகம்.
வன்மாலை - வலிமையான மாலை : மிக்க மயக்கம். மால்
- மயக்கம். இங்கே எதுகை நயம் நோக்கி ஐகாரச்
சாரியை பெற்றது. பொன்மாலை - பொன் போன்று
மதிக்கத் தகுந்த மாலையென்று கொள்ளலுமாம்.
பொன் - இலக்குமி. அவள் போன்றாளைப்
பொன்னென்றது ஆகுபெயர். பொன் :
மகளிர்களுக்கெல்லாம் பொன்போன்று மேலாக
மதிக்கத் தகுந்த கற்பும் பொற்பும் உருவுந்
திருவும் ஒத்த பண்புடையாள் என்று கோடலுமாம்.
பொன் உலகில் உயர்வாக மதிக்கத்தக்க பொருள் ;
அதை நெருப்பிலிட்டுப் புடம் போடப்போட,
ஒளிமிகுவது; அதுபோல, தமயந்தியும்
தான்துன்பமுற்றாலும், தன் கற்புத்திறம் மேன்மேல்
உயர்வுற மனத்திண்மைபெற்ற கனங்குழையாகலான் ‘பொன்’
என்றார் என்றலுமாம். சுளிக்க களிகூர சூட முதலிய
செயவெனெச்சங்கள் நிகழ்காலங் காட்டி நின்றன.
(154)
|