பக்கம் எண் :

மூலமும் உரையும்189

நளமன்னனுக்குத் தமயந்தி மாலை சூட்டக் கண்ட மன்னர்கள்
முகம் வெளுத்தல்

162. திண்டோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது.

(இ - ள்.) ஒண்தாரை கோமாலை வேலான் - ஒளியுங் கூர்மையுங் கொண்ட சிறந்த மலர்மாலையணிந்த வேற்படை தாங்கிய நளமன்னன், குலம் மால் ஐ வேல் கண்ணாள் - சிறந்த வேல் போன்ற அழகிய கண்களையுடைய தமயந்தியின், பூமாலை பெற்று இருந்தபோது - சுயம்வர மலர்மாலையை பூண்டு வீற்றிருந்த போது, திண்தோள் வயவேந்தர் - வலிமை பொருந்திய தோள்களையுடைய வெற்றி வேந்தர்களின், செந்தாமரை முகம் போய் - சிவந்த தாமரை மலர்போன்ற முகங்களின் அழகுமாறி, வெண் தாமரையாய் வெளுத்த - வெண்ணிறமுள்ள தாமரை மலர்களைப் போன்று முகஅழகு குன்றி வெளுத்து இருந்தன.

(க - து.) தமயந்தியினுடைய சுயம்வர மலர்மாலை சூட்டப்பெற்று நளமன்னன் வீற்றிருந்தபோது, வலிமை மிக்க தோள்களையுடைய அரசர் முகங்களெல்லாம் அழகு குன்றி வெளுத்துப் போயிருந்தன என்பதாம்.

(வி - ரை.) தம் தோள்வலியானும் வாள்வலியானும் எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் ஆற்றலுடையார் வேந்தர்கள் என்பதைக் குறிக்கத், ‘திண்டோள் வய வேந்தர்’ என்றார். இவ்வாற்றால் பெற்றாரும் தம் வலியால் ஒன்றும் ஆற்றவொண்ணாத நிலையில் நள மன்னனுக்குத் தமயந்தி மாலை சூட்டியதைக் கண்டு முகக்களை இழந்து வருந்தி இருந்தனர் என்பதைக் குறித்தற்குச், ‘செந்...வெளுத்தவே’ என்றார். மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் கொண்ட முகத்திற்குச் செந்தாமரையின் செவ்விய மலரையும், அஃதன்றி வருத்தமும் மனக் கிளர்ச்சியுமற்றிருக்கும் முகத்திற்கு வெண்தாமரை மலரையும் உவமித்துக் கூறுவது மரபாகலான், இங்கே, அவ்வுவமையையே உவமேயங் கொள்ள அவ்வவ் உவமானப் பொருளையே ‘செந்தாரை வெண்டாமரை’ என வியப்புத் தோன்றக் கூறினார். அவை அவ்வவைகளின் பண்பைக் குறித்தலால் ஆகுபெயர். போது - பொழுது என்பதன் மரூஉ மொழி. கைகேசி சூழ்ச்சியால் முடிசூடுவதை