இழந்து காகுத்தன் கைகேசியால் நாட்டை
இழந்து காடு செல்லும்படி ஏவப்பெற்ற காலையில்
அவன் முகப்பொலிவு குன்றாதிருந்த இயல்பைக்
கம்பரும், 1‘அப்பொழு தலர்ந்த செந்தாமரையினை
வென்ற தம்மா’ என்று கூறுவது நோக்கத் தக்கது. (155)
நளமன்னன், தமயந்தியுடன் சுயம்வர மண்டபத்தினின்றும்
புறப்படல்
163. மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோல் செம்மாந்து - மெல்லியலாள்
பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன்.
(இ - ள்.) நல் மாலை வேலான் நளன் .
நல்ல மலர்மாலையணிந்த வேற்படையைக்
கொண்டவனாகிய நள மன்னன், மல்லல் மறுகில் -
வளப்பம் பொருந்திய வீதியில், நாகு உடன் ஆக
செல்லும் மழவிடைபோல் - இளமையுள்ள பசுவானது
தன்னுடன் கூடவர நடந்து செல்கின்ற இளமை
பொருந்திய காளையைப் போன்று, செம்மாந்து -
களிப்பால் விம்மிதமடைந்து, மெல் இயலாள்
பொன்மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான் -
மென்மைத்தன்மையுள்ள தமயந்தியின் அழகிய
சுயம்வர மாலையை யணிந்த தோளின் தோற்றப்
பொலிவுடன் புறப்பட்டுச் சென்றான்.
(க - து.) நள மன்னன், இளம் பசுவுடன்
செல்லும் ஆனேறுபோன்று மகிழ்ச்சி வீறுகொண்டு
சுயம்வர மண்டபத்தினின்றும் புறப்பட்டுச்
சென்றான் என்பதாம்.
( வி - ரை.) மல்லல் - வளப்பச்
சிறப்பு. பல்வகைப் பொருள்கள் விற்கும் வீதிக்கு
அடைமொழி. நாகு - இளமையுள்ள எருமை ஆன் இவைகளின்
பெண்ணினத்தைக் குறிக்கும் சொல்.
2‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே’
என்னும் தொல்காப்பியம் மரபியல்
நூற்பாவினால் ‘நாகு’ என்பது, ஆனின்
பெண்ணினத்துக்காயிற்று. இதனை,
1. கம்பரா, கைகேசி சூழ் : 108.
2. தொல், மரபியல் : 62.
|