பக்கம் எண் :

மூலமும் உரையும்191

1மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ’

என்றார் அகத்தினும் நளவேந்தன் தமயந்தி பின்தொடர அரசர் பெருந்தெரு வழியாகப் புறப்பட்டுச் சென்ற காட்சி, நல்ல இளமை மிக்க அழகுள்ள பசு பின்தொடரக் கட்டழகும் இளமையும் உள்ள ஆனேறு பெருமித நடையோடு செல்வதுபோல் சிறப்பு மிக்கதாக இருந்தது. அதனை ‘மடநாகுடனாகச் செல்லும் மழவிடை போல்’ என்ற தொடரினாற் குறித்தார். இதனை, 2‘ஏறுபோற் பீடுநடை’ என்பர் திருவள்ளுவர். குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த மழலைக் கிளிபோல்வாளாகிய தமயந்தியின் மணமலர் மாலை தனக்குச் சூட்டப்பெற்றதால் கொண்ட மகிழ்வும், கற்புக் கடன் வழுவாது தனக்கே மணமலை சூட்டியதால் உண்டாயதருக்கும், தன்னுடன் அவள் தொடர்ந்து பின்வரலால் கொண்ட மனக் கிளர்வும் நளனுக்கு இன்பைப் பெருக்க அதனால் ‘செம்மாந்து........புறப்பட்டான்’ என்றார். ‘தான் பொன் மாலை பெற்றான், தன்வேல் நன் மாலை பெற்றது’ என்னும் நயந்தோன்ற, ‘பொன் மாலை பெற்ற தோளோடும்.........நன்மாலை வேலான்’ என அமைத்த சொற்றிறம் அறிந்து அறிந்து இன்புறற்பாலன. (156)

தேவர்கள், தமயந்தி மணமாலை பெறாது திரும்பிச் சென்று
கலியைக் காண்டல்

164. வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் - வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறியில் ஆக்கும்
இருங்கலியைக் கண்டார் எதிர்.

(இ - ள்.) வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை - கடலிற் பிறவாத அமிழ்தத்தை ஒத்த வீமன் செல்ல மகளாகிய தமயந்தியினது, மாலை பெறாது அகலும் வான் நாடர் - சுயம்வர மணமாலையைப் பெறாமல் திரும்பிச் செல்கின்ற தேவேந்திரன் முதலிய வானாட்டு வாழ்வோர், வேலை பொரும் கலிநீர் ஞாலத்தை - அலைகள் மோதுகின்ற ஒலியையுடைய கடல் சூழ்ந்த உலக மக்களை, புல் நெறியில் ஆக்கும் இருங்கலியை - (சூது முதலிய) வழியல்லா வழியிற் செலுத்தித் துன்புறுத்துகின்ற பெருமையுடைய கலியென்பானை, எதிர் கண்டார் - நேரிற் கண்டார்கள்.

1. அகம் : 64. 2. திருக்குறள் : 59.