பக்கம் எண் :

194நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(இ - ள்.) இமையவர்தம் கோன் - தேவர்கட்கு வேந்தனான இந்திரன், ஈங்குவரவு என் என்று வினவ - (நீ) இங்கே வருவதற்குக் (காரணம்) யாது என்று (கலிமகனைக்) கேட்க, தீங்கு தருகலியும் - (மக்கட்குத்) துன்பங் கொடுக்கின்ற அக் கலிமகனும், நீங்கள் விருப்புஆன - நீங்கள் விரும்புதற்குரியளான, வீமன் திருமடந்தையோடும் - வீம மன்னனுடைய செல்வ மகளுடன், யான் இருப்பான் வருகின்றேன் - நான் (மணந்து அவளைக்) கூடியிருக்க வருவதானேன் என்றான்.

(க - து.) கலிமகனை இந்திரன் நீ வருங்காரணம் யாதென்று கேட்க அதற்கு அவன், ‘நீங்கள் விரும்பியுள்ள தமயந்தியை மணந்து வாழ்வதற்காகவே வருகின்றேன்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) கலிமகன் தீமைக் குணத்தையே குணமாகக் கொண்டவனென்பதை நிலைக்குக் கொணர, முன்பாட்டில் ‘புன்னெறியில் ஆக்கும் இருங்கலி’ என்று கூறியதோடமையாது, இப்பாடலினும், ‘தீங்கு தருகலியும்’ என்று மீண்டும் கூறினார். நீங்கள் என்பது உருபேற்றவழியும் உங்கள் என ஆகாமல் இயல்பாக நின்றது. ‘இயல்பின் விகாரமும்’ என்ற நன்னூல் நூற்பாவில் ‘விகாரத்தியல்பும்’ என்ற விதியாற்கொள்க. ‘மடந்தை’ என்பது பருவப் பெயரைக் குறிக்காமல் பெண்ணென்னும் பொதுப் பெயராக நின்றது. திருமடந்தை யென்பதற்குச் திருமகள் போன்ற தமயந்தியென்றும், செல்வம் போன்று போற்றத் தகுந்தவள் என்றும் வடிவு, தொழில் உவமமாகக் கொண்டு பொருள் கூறலுமாம். இருப்பான் : பானீற்று வினை யெச்சம், வருகின்றேன் என்னும் வினைகொண்டு முடிந்தது. (158)

இந்திரன், தமயந்தி ‘நளனுக்கே மாலைசூட்டினாள்;
நீ திரும்பிப்போ’ என்றான் எனல்

166. மன்னவரின் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய
உள்ளக் கருத்தை ஒழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்து.

(இ - ள்.) வெள்ளைத் தனியானை வேந்து - வெண்ணிறம் பொருந்திய ஒப்பற்ற (ஐராவதமென்னும்) யானைக்கு அரசனாகிய இந்திரன், மன்னவரில் வைவேல் நளனே - மண்ணுலக வேந்தர்களில் கூர்மைபொருந்திய வேலையுடைய நளமன்னனே, மதி