பக்கம் எண் :

196நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(இ - ள்.) கொதித்து - (அச் சொல்லைக்கேட்ட கலிமகன்) சினங்கொண்டு, விண் அரசர் நிற்க - வானுலக வேந்தர்களாகிய (நீவிர்) இருக்க, வெறி தேன் மணமாலை - மணம் வீசுகின்ற தேன் பொருந்திய சுயம்வர மணமாலையை, மண் அரசற்கு ஈந்த மடமாதின் எண்ணம் கொடக்கின்றேன்-பூவுலக மன்னனாகிய நளனுக்குச் சூட்டிய அறியாமையையுடைய தமயந்தியின் ஆசையை அழிக்கின்றேன், மற்று அவள்தன் கேள்வனுக்கும் கீழ்மை கொடுக்கின்றேன் - அஃதல்லாமலும் அவள் கணவனாகிய நளனுக்கும் தாழ்வுண்டாக்குகின்றேன், என்றான் - என்று கூறினான்.

(க - து.) இவ்வாறு கூறிய சொல்லைக் கேட்ட கலி, ‘உம்மைப்போன்ற வானுலக வேந்தரெல்லாம் இருக்க, மண்ணுலக அரசனான நளனுக்கு மணமாலை சூட்டிய அறியாமைக்குணமுள்ள தமயந்தியைக் கெடுக்கின்றேன் ; அவள் கணவனாகிய நளனுக்கும் தீமையை உண்டாக்குகின்றேன்’ என்று சினந்து கூறினான் என்பதாம்.

(வி - ரை.) விண்ணரசர் : முன்னிலைப் படர்க்கையாக வந்த இடவழுவமைதி. ‘எம்பியை ஈங்குப் பெற்றேன் ஏன்னெனக் கரியது’ எனத் தம்பியாகிய உன்னை எனற்பாலது ‘எம்பியை’ எனப் படர்க்கையாகக் கூறியதுபோற் கொள்க. மடம் : இளமை, அறியாமை முதலிய பொருள் குறித்த உரிச்சொல். ஈண்டு, மண்ணகத்தாரினும் விண்ணகத்தார் அழகு இளமை மிக்காராய், பிணி மூப்பு நரை திரை யற்றாராய்ச் சிறந்தவராயிருப்ப அவரை நீத்து, கனியிருப்பக் காய் கவர்வார் போல, மண்ணுலக மன்னனை விரும்பி மணமாலை சூட்டினாளாதலின், ‘மடமாது’ என, அறியாமையுடையாளெனச் சினங்கொண்டு கூறினான் என்க. தாம் விரும்பிய பொருள் கிட்டப்பெறாதார் சினங்கொண்டு தம் விருப்பத்துக்கு மாறுபட்டாருக்குத் தீமை செய்ய முயல்வது உலகியல் ஆதலான், கலியும் தன் விருப்பங்கிட்டாதது கேட்டறிந்தவுடன், ‘மடமாதின் எண்ணம் கெடுக்கின்றேன்......தீமை கொடுக்கின்றேன்’ என்றான். மற்று: வினைமாற்றுப் பொருளில் வந்த இடைச்சொல். கேள்வன், கேண்மையென்னும் பண்படியாகப் பிறந்த பெயர்ச்சொல். கேள் : கிளை - உறவு. 1‘கேள் கேடூன்றவும்’ என்பதுங் காண்க. கீழ்மை தாழ்வு கொடுக்கும் செயல் : பண்பாகு பெயர். கொதித்தல் - சினந்து பொங்குதல். நெருப்புப் போன்று கெடுக்கும் நீர்மைத்தாகலின் கொதித்தலென்ற சொல் சினத்தைக் குறித்தது. 2‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்றார், திருவள்ளுவரும். (160)

1. அகம் : 93. 2. திருக்குறள் : 306.