பக்கம் எண் :

மூலமும் உரையும்197

இந்திரன், கலிமகனுக்கு நளன் பெருமையும் தமயந்தியின்
கற்பின் பொற்பும் உரைத்துச் செல்லுதல்

168. வாய்மையம் சேங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு.

(இ - ள்.) அடும் கொற்ற வச்சிரத்தான் ஆங்கு நின்று - எதிரிகளைக் கொல்லுகின்ற வச்சிராயுதப் படையையுடைய இந்திரன் அவ்விடத்தே சிறிது தாழ்த்துநின்று, அவன் வாய்மையும் - அந் நளமன்னனுடைய உண்மை நெறியையும், செங்கோல் வளனும் - நெறிமுறை வழுவாத ஆட்சியின் மாண்பும், மனத்தின் கண் தூய்மையும் - நடுநின்ற மனத்தின் நேர்மையும், மற்று தோள்வலியும் - இன்னும் தோளாற்றலும், பூமான் நெடும் கற்பும் - செந்தாமரைச் செல்வியாகிய திருமகளையொத்த தமயந்தியின் நீங்காத கற்பு முறையும், அவர்க்கு உரைத்துப் போனான் - அக் கலிக்கு விளக்கிச் சொல்லிச் சென்றான்.

(க - து.) இந்திரன் சிறிதுநேரம் ஆங்கே தாழ்த்து நின்று நளனுடைய உண்மை நெறி முதலியவற்றையும் தமயந்தியின் கற்புச் சிறப்பையும் கலிக்கு எடுத்துக்கூறிச் சென்றான் என்பதாம்.

(வி - ரை.) ஆடவர்க்குரிய உயர்குணங்களிற் சிறந்தது உண்மை கடைப்பிடித்தல் ; வேந்தர்கட்குரிய சிறப்பு கோல் முறை கோடாச் செங்கோலாட்சி ; வீரர்கட்குரிய சிறப்பு தோளாற்றல் ; இங்கே நளமன்னனுக்கு வாய்மை, நெறிமுறை, தோள்வலிமை முதலிய இவ்வெல்லாம் ஒருங்கே குடிகொண்டிருத்தலால், அவைகளையெல்லாம் கலியின் மனங்கொள்ளுமாறு கூறினான். தமயந்தியின் சிறப்பை விளக்கும்போது, பெண்கட்கு உயிரினும் சிறந்தது நாணம் ; அதிலும் சிறந்தது, செயிர் தீர்காட்சிக் கற்பு என்ப ஆகலான், கற்பு என்னும் கலங்காநிலை பெற்ற விழுமிய பெண்தன்மையையுடையாள் என்பதையும் அவனுக்குக் கூறி, அவர்கள்பால் அணுகுதல் சிறந்ததன்று ; ‘அணுகாதே’ எனக் குறிப்பால் உணர்த்தினான் என்க. சொன்னவன், மெலியவனல்லன், வலியோன், தன்னினும் தோளாற்றலினும் வாளாற்றலினும் சிறந்தோனென்பதைக் குறித்தற்கு ‘அடுங்கொற்ற வச்சிரத்தான்’ என்ற பெயராற் கூறினாரென்க. பூமான் கற்பு என்பதற்கு, நிலவேந்தனுடைய கல்வி முறையென்று பொருள்கூறலமாம். என்னை ?