பக்கம் எண் :

198நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

1‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு’

என்பது வள்ளுவர் மறையாகலான், அரசர்கட்குக் கல்வி சிறந்ததென்பது பெறப்படும். ஆதலான் என்க. (161)

கலிமன், நளன் ‘தமயந்தியுடன் கூடி இருக்கப் பொறுக்கேன்’
என்று கூறல்

169. செருக்கதிர்வேல் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க
உடனாக என்றான் உடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு.

(இ - ள்.) உடனே - (இவ்வாறு இந்திரன் கூறியதைக் கேட்ட) அப்போதே, பிறந்த விடநாகம் அன்னான் - தான் பிறந்த போதே நஞ்சோடு தோன்றிய நாகப்பாம்பை ஒத்தவனாகிய கலிமகன், வெகுண்டு - சினந்து, செரு கதிர் வேல் கண்ணியுடன் - போரிற் சிறந்த ஒளியெறிக்கின்ற வேல்போன்ற கண்களையுடைய தமயந்தியோடு, தேர்வேந்தன் கூடஇருக்க தரியேன் - தேரினையுடைய நளமன்னன்கூட ஒன்றுபட்டு வாழ்வதற்கு மனம் பொறுக்கேன், இவரைப் பிரிக்க உடன் ஆக என்றான் - இவ்விருவர்களையும் தனித்தனியாக (நான்) பிரித்துவிடுதற்கு நீவிரும் உடன்படுவீராக என்று கூறினான்.

(க - து.) நஞ்சுடன் பிறந்த நாகப்பாம்பை யொத்த கலிமகன், இந்திரன் முதலியோரைப் பார்த்து, ‘நளன், தமயந்தி இருவரும் ஒன்றுபட்டு வாழ்தற்கு நான் மனம் பொறேன் ; ஆதலால், இவர்களைப் பிரித்தற்கு நீவிர் உடன் படுவீராக’ என்று சொன்னான் என்பதாம்.

(வி - ரை.) செரு கதிர் - செருச் செய்கின்ற ஒளியுடைய என வேலினுக்குச் சிறப்புக் கூறியவாறு. வேல் : வெல்லும் தன்மையுடைய தென்பது பொருள். அதுபோன்ற வெம்மையுடைய தெனக் கண்கட்கு அடைமொழி. உடன் : மூன்றாம் வேற்றுமையுருபு, உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. கொடுமையுடையாரைக் குறித்தற்கு நச்சுப் பாம்பை உவமை கூறுவது மரபு. அந்த முறையில், நல்லாரென்னான் ; தீயோரென்னான் ; கற்றோர்

1. திருக்குறள் : 383.