பக்கம் எண் :

மூலமும் உரையும்199

என்னான் ; மற்றோர் என்னான் ; செல்வர் என்னான் ; வறியோர் என்னான் ; யாராக இருப்பினும் தன் கொடிய ஆற்றலால் ஆலைப்பவன் ஆதலால், ‘விடநாகம் அன்னான்’ என்றார். உடன்ஆக - உடன்படுக ; உதவியாக இருப்பீர்களாக. இவரை: சுட்டடியாகப் பிறந்த பெயர். ஈண்டு நளன், தமயந்தி. (162)

ஞாயிறு, திருமணங்காண வருவான்போல் தோன்றுதல்

170. வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்
தீயடங்க ஏறினான் தேர்.

(இ - ள்.) வெம் கதிரோன் தானும் - வெப்பமாகிய கதிர்களையுடைய ஞாயிறும், விதர்ப்பன் திருமடந்தை - விதர்ப்ப நாட்டுக்குரிய வீமனுடைய செல்வ மகளாகிய தமயந்தியின், மங்கல நாள் காண வருவான்போல் - திருமணச்சிறப்பைக் காண்பதற்கு வருபவன்போல, செம் குமுதம் வாய் அடங்க - செவ்வல்லி மலர்கள் இதழ்களை மூடிக்கொண்டு குவியவும் மன்னற்கும் வஞ்சிக்கும் - நள மன்னனுக்கும் வஞ்சிக்கொடிபோன்ற தமயந்திக்கும், நல்நெஞ்சில் தீ அடங்க - உள்ளன்புடைய மனத்தல் காதல் தீத்தணிய, தேர் ஏறினான் - தேரேறிப் புறப்பட்டான்.

(க - து.) தமயந்தியின் திருமணங் கண்டு களிப்பதற்கு வருபவனைப்போல, செவ்வல்லி மலர்கள் குவிய நளன், தமயந்தி நெஞ்சிற் காதல் தீத் தணிய, ஞாயிறு தேரேறிப் புறப்பட்டான் என்பதாம்.

(வி - ரை.) வெம்கதிரோன் - வெப்பமுள்ள ஒளிக்கதிர் களையுடையோன் என்பது பொருள். மங்கலநாள் - திருமணக்காட்சி. நாள் என்பது ஆகுபெயராகக் காட்சியைக் குறித்தது. ஞாயிறு தோன்றுங்கால் அல்லிமலர் குவிதலும் தாமரை மலர் விரிதலும் இயல்பு. காதலால் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் ‘என்று கூடிக்களிப்போம்’ என்று கொண்டிருந்த காதலென்னும் நெருப்புத் தன் ஆற்றல் குன்றியமைய எனக், காலை ஞாயிறு தோற்றத்தோ டடைவுபடுத்த அன்று காலைப்பொழுதில் திருமணம் நிகழ்வதற்கு ஞாயிற்றின் தோற்றத்தை எதிர்பார்த்திருந்தபடி தோன்றிற்றென்பதைக் குறிக்க அவர் திருமணங்காண வருவான் போலென்று தற்குறிப் பேற்றங் கொடுத்துக்கூறினார்.