|
என்றார். மலர் அதனாலாகிய மாலைக்கு
ஆதலால் காரியவாகு பெயர். பூ முதன்மையான தென்பதை
நல்லாசிரியரின் சிறப்புக்குப் பவணந்தி முனிவர்,
‘1மங்கலம் ஆகி இன்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே’
என்றதறிக. ‘மின் இமைக்கும் பூண்’
என்ற பொதுமையால் சிலம்பு முதல் தலையணியாம்
சூளாமணி ஈறாக என்பது பெற்றாம். பொன்மலரும்
என்பதில் உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. (164)
கணியர், குறித்த நாளில் திருமணம்
நிகழ்த்தினரெனல்
172. கணிமொழிந்த நாளில் கடிமணமும் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன்
அறைபுக்கார்
மறறெவரும் ஒவ்வார் மகிழ்ந்து.
(இ - ள்.) கணிமொழிந்த நாளில் -
ஒளிநூல் வல்லுநர் குறித்த நன்னாளில்,
அணிமொழிக்கும் அண்ணல் அவற்கும் - அழகிய
பேச்சினாளாகிய தமயந்திக்கும் பெருமை
பொருந்திய நளமன்னனுக்கும், கடிமணமும் செய்தார் -
சிறப்புமிக்க திருமணஞ் செய்வித்தார்கள், மற்ற
எவரும் ஒவ்வார் - தந்நிகரில்லாது தாமே நிகரான
நளனும் தமயந்தியும், பணிமொழியார் - வணங்கிய
வாய்ச்சொற்களையுடைய ஏவற்பெண்கள், குறு ஏவல்
செய்ய - அடித்தொழிலாட்டியராய் இவ்விருவர்க்கும்
சிறு சிறு ஏவல் தொழில்களைக் குறிப்பறிந்து
செய்துவர, மகிழ்ந்து - மகிழ்ச்சியிற் சிறந்து,
கொழும் பொன் அறைபுக்கார் - (தாம் தங்கி இருந்து
வருதற்கமைத்துள்ள) செம்பொன்னான இயன்ற
உள்ளறையில் போய்ச் சேர்ந்தார்கள்.
(க - து.) தமயந்திக்கும் நளனுக்கும்
சோதிடர்கள் குறித்த நன்னாளில் திருமணஞ்
செய்தார்கள்; தந்நிகரில்லா அவர்கட்கு
ஏவற்பெண்கள் குற்றேவல் செய்ய அவர்கள்
செம்பொன்னாலாக்கிய அறையில்
புகுந்திருந்தார்கள் என்பதாம்.
1. நன்னூல் : 30.
|