|
(வி - ரை.) கணி : கணிப்பவன்;
கணக்கிடுவோன். கோள்களின் நிலையைக்
கணித்தலையுடையோன் என்பது பொருள். கணித்தல்
என்பதிலுள்ள, தல்விகுதி கெடக் கணியென நின்ற
முதனிலைத் தொழிற்பெயர். ஈண்டுத் தொழிலாகு
பெயராக அஃதுடையானைச் சுட்டிற்று. கடி - சிறப்பு. பிற
மணங்கள் போலன்றிக் காதலாற் பிணிப்புண்டு
இயற்கைவழி நிகழ்ந்த சுயம்வரமாகலான், ‘கடி மணம்’
என்றார். மணமும் என்பதில் உள்ள உம்மை
முன்சுயம்வரமன்றித் திருமணமும்
நிகழந்ததென்றதைக் குறித்தலால் இறந்தது தழீஇய
எச்சவும்மை. அணிமொழி - அழகிய சொல். அஃதாவது,
மெல்லிய இனிய மழலைச் சொல். அஃதுடையாளைக்
குறித்தலால், பண்புத் தொகைநிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித் தொகை. அண்ணல் -
பொருந்துதல், சேர்தல் என்னும் பொருட்டு. அஃது
பெருமை பொருந்துதல் என்னும் பொருளாய் அஃதுடைய
நளவேந்தனுக்கானதால் தொழிலாகு பெயர். ‘அணி
மொழி’ எனத் தமயந்தியை முன்வைத்து, ‘அண்ணல்’
என நளனைப் பின்வைத்தது, கற்புக் கடம்பூண்ட
பொற்புடையளாகலின் என்க. என்னை ? இளங்கோவடிகள்
ஆக்கியருளிய செஞ்சொற் காப்பியத்தில் ‘ஈகைவான்
கொடியன்னாள்’ எனக் கண்ணகியாரை முன்வைத்தும்,
‘இருநிதிக்கிழவன் மகன்’ எனக் கோவலனாரைப்
பின்வைத்தும் கூறியதுபோல் கொள்க.
பணிமொழியார் - தாழ்மையான சொற்களையுடையார் :
ஈண்டு ஏவற்பெண்களைக் குறித்தது, ஒன்றொழி
பொதுச் சொல். ஏவல் செய்வோர்க்குப் பணிந்த
மொழியும் தாழ்ந்த பண்பும் இருக்கவேண்டிய
முதன்மையாகலான், ‘பணிமொழியார்’ என்றார்.
அறை - அறுக்கப்படுவது : வரையறுத்த இடத்தைக்
குறிப்பதால் இதுவும் தொழிலாகு பெயர். (165)
சேர்க்கை வகை கூறுதல்
173. செந்திருவின் கொங்கையினும் தேர்வேந்தன்
ஆகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சும் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சும் தொடுத்தான் அவன்.
(இ - ள்.) செந்திருவின்
கொங்கையினும் - செம்மையிற் சிறந்த திருமகள்
போன்ற தமயந்தியின் கொங்கைகள் மீதும்,
தேர்வேந்தன் ஆகத்தும் வந்து உருவ - தேரையுடைய
நளமன்னன் மார்பின் மீதும் பாய்ந்து ஊடுருவிச்
செல்லும்படி, வார்சிலையை கால்வளைத்து - நீண்ட
கரும்பு வில்லின் நுனியைப் பற்றி வளைத்து,
வெம்தீயும் நஞ்சும் தொடுத்த அனைய - வெப்ப
|