|
மான தீயையும் நஞ்சையும்
ஒன்றுபடுத்திச் சேர்த்தது போன்றிருக்கின்ற, நாம
மலர்வாளி அஞ்சும் - அச்சந் தருகின்ற மலரம்புகள்
ஐந்தையும், அவன் தொடுத்தான் - அம்மலரம்புக்
குரியனாகிய மன்மதன் கோத்து எய்தான்.
(க - து.) நளன், தமயந்தி
இருவர்களின் மார்புகளிற் பாய்ந்து ஊடுருவிச்
செல்லும்படி மன்மதன் ஐவகை மலரம்புகளையும்
வில்லிற் கோத்து எய்தான் என்பதாம்.
(வி - ரை.) தமயந்தியும் நளனும்
தனியறை புகுந்து மலரணை மீது இருந்தபோது
அவ்விருவர்க்கும் காதலை உண்டாக்குதற் பொருட்டு
மன்மதன் மலரம்புகள் ஐந்தையும் தேர்ந்தெடுத்து
மார்பில் ஊடுருவிச் செல்ல எய்தான் என, அவர்தம்
காதல்மிக்க நிலையை உணர்த்தினார். செந்திரு -
செம்மையாகிய திருமகள் போன்றவள் என விரிதலால்
பண்புத்தொகை நிலைக் களத்துப் பிறந்த
அன்மொழித் தொகை. ஆகம் - மார்பு. பாணங்கள்
மலராயினும் காதலர்தம் மார்பிற் புகுந்ததும்
நெருப்பும் நஞ்சும் போல் கொடுந்துன்பம்
விளைத்தலான், ‘வெந்தீயும்
நஞ்சும்.........மலர்வாளி’ என்றார். நாம் அச்சம்.
அது நாம என அகரச் சாரியை யேற்று நின்றது. என்னை?
1‘பேம்நாம் உருமென வரூஉங் கிளவி
ஆமுரை மூன்றும் அச்சப் பொருள’
என்றார் தொல்காப்பியர். நாம
மலர்வாளி என்பதற்குத் தனித்தனி வெவ்வேறு
பெயருடைய வாளி என்றலுமாம். அவன் என்பது பண்டறி
சுட்டாய் ‘மலர்வாளி அஞ்சும்’ என்னும்
குறிப்பால் மன்மதற்கு ஆயிற்று. அஞ்சு-ஐந்து
என்பதன் போலி. ஞ, ச, த, ந வுக்குப் போலி. (166)
நளனும் தமயந்தியும் நீரும் நீரும் கலந்தாற்போல்
ஒன்று கலந்தாரெனல்
174. ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர்எனும் தோற்றம் இன்றிப் -
பொருவெங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று.
1. தொல்.
|