பக்கம் எண் :

மூலமும் உரையும்205

(இ - ள்.) பொருவெம் கனற்கு ஏயும் வேலானும் - போர் செய்கின்ற கொடுமையான நெருப்பினை யொத்த வேற்படையேந்திய நள மன்னனும், காரிகையும் - தமயந்தியும், ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி - (அவன் ஐந்துந் தொடுத்தபின்) ஒருவர் உடம்பின் மீது மற்றொருவர் (உடம்பு உராய்ந்து) ஒன்றுபட்டுத் தழுவி, இருவர் எனும் தோற்றம் இன்றி - இருவரென்று கூறற்கியலாப் பாகுபாடற்று, புனற்கே புனல் கலந்தால் போன்று சேர்ந்தார் - நீருடன் நீர் ஒன்று கலந்து வேறற நிற்பது போன்று இரண்டறக் கலந்து கூடினார்கள்.

(க - து.) நளனும் தமயந்தியும் ஒருவரோடு ஒருவர் ஒன்றுபட்டு நீரும் நீரும் கலந்தாற்போன்று வேறுபாடற்று இரண்டறக் கூடினார்கள் என்பதாம்.

(வி - ரை.) ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்குதல், காதலாற்றழுவுதல். அஃதாவது, முயக்கிடைத் தண்வளியும் ஊடு செல்லாவாறு ஒன்றுபட்டு இறுதிப் பிணைதல். இதனை இளங்கோவடிகளார், கண்ணகியாரும் கோவலனாரும் காதலாற் பிணைந்து பிரிவின்றியைந்த அன்பு நிலையைக் காட்டப் போந்தகாலை,

1தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பமெலாம் துன்னினார்

எனவுரைத்ததூஉம் இக் கருத்தோ டொத்ததாதலை அறிக.

புனற்கே புனல் கலந்தாற் போல்வது என்பது, அன்பாற் பிணைப்புண்ட நெஞ்சினராக ‘எக்காற் காண்பேம்; எக்கால் உரையாடுவேம் ; எக்கால் தழுவுவேம்’ என்று ஒரு நாளை ஏழுநாள் போன்று ஊழிபோன்று கழியக் கழியாத நிலையில் எண்ணி யெண்ணி ஏக்கற்றிருந்து கலந்த நிலையை. இருவரும் ஒருவராய்க் கலந்த நிலை, ஒரு குவளையிலுள்ள நீரையும் மற்றொரு குவளையிலுள்ள நீரையும் வேறொன்றில் ஒன்றாக ஊற்றியபோத அந்நீர் தனித்தனி நீராகப் பிரிக்க இயலாததாய் வேறுபாடற்று ஒன்றாகக் கலந்து நிற்பதுபோல நின்றாரென்பதைக் குறித்ததாம்.

2யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சும் தாங்கலந் தனவே.’

1. சிலப், 2 : இறுதி வெண்பா. 2. குறுந்தொகை : 40.