|
தேன்: செழித்த மலரிலுண்டாகிய
தேன்போன்ற இனியமொழியாளென்று அன்மொழித்
தொகையாக்கிப் பொருள் கொள்ளலுமாம். காதலாற்
கனிந்து தம் காதலியைத் காதலன் உயர்ந்த
பொருள்களையெல்லாம் கொண்டு உவமித்துப் பேசிப்
பேசிப் பாராட்டுதல் இயற்கை. அன்புள்ளவிடத்து
எப்பண்பு தோன்றாது? எல்லாம் தோன்றுமன்றோ?
இம்முறையில் ‘காசறு விரையே கரும்பே தேனே’ எனக்
கண்ணகியாரைக் கோவலன் பாராட்டியதாக இளங்கோ
அடிகளார் இயற்கையாக அமைத்துரைத்தலும் அறிக.
ஈண்டும் தமயந்தியைத் ‘தேனே’ என நளன்
பாராட்டினான். தெளிதல் - ஐயமற அறிதல்.
தமயந்திக்கு, இவள்போன்ற நற்பண்புகள் மேலும்
அமையவேண்டுமெனக் கருதினான் நளமன்னன்.
அதற்காகவே, பார், காண் முதலிய சொற்கள்
எளிமையாக இருக்கவும் இக்கருத்தானே ‘தேனே !’ என
விளித்துத் ‘தெளி’ என்ற சொல்லாற்
கூறினானென்க. (7)
நளன், தமயந்திக்கு, நாயகன் ஒருவன் தன்
நாயகிக்கு
மலர்சூட்டுதலைக் காட்டல்
186. கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதாரம் இன்மை அறிந்து.
(இ - ள்.) கொய்த மலரை கொடும்
கையினால் அணைத்து - (நாயகன் ஒருவன்) தான் பறித்த
பூக்களைத் தன் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு
போய், மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து - தன்
நாயகியின் அடர்ந்த கூந்தலிலணிவதற்கு அவள்
நேரேவந்து நின்று (உற்று நோக்கி), பாவை இடைக்கு
ஆதாரம் இன்மை அறிந்து - பாவைபோல்வாளாகிய தன்
காதலியின் நுசுப்பிற்கு யாதொரு பற்றுக்கோடு
மில்லாதிருத்தலைத் தெரிந்துகொண்டு, பாத
அரவிந்தத்தே சூட்டினான் - அவளின் தாமரை மலரனைய
அடிகளில் வைத்தான். (ஏ! நங்காய் பார்.)
(க - து.) நாயகன் ஒருவன் மலர்களைப்
பறித்தெடுத்துத் தன் உள்ளங்கையில்
அணைத்துக்கொண்டு போய்த் தன் நாயகி கூந்தலுக்கு
அணிய எண்ணி, அவளின் முன்புபோய் நின்று
உற்றுப்பார்த்து அவள் இடைதாங்காதெனக் கருதி,
அவள் கால்களுக்குச் சூட்டினான் (நங்காய் பார்)
என்றான் என்பதாம்.
|