பக்கம் எண் :

மூலமும் உரையும்223

தூய மலர்போல் நுரைத்தொகையும் முத்துஞ்

சிந்திப் புடைசுருட்டிப்

பாய லுதறிப் படுப்பதே யொத்த

திரையின் பரப்பம்மா’

என வருதல் காண்க. ஏற்றம்-உயர்ச்சி : பெருமை. ஏற்ற எனப்பிரித்து, பொருந்திய என்று பொருள் கொள்ளலுமாம். புலவித் தோற்றம் - புலவிக்குரியதுபோல் காணப்பெறுந் தன்மை. வளை - சங்கு. சங்கிலிருந்தும் முத்துக்கள் பிறக்குமென்பது அறிந்த உண்மையாகலான், ‘வளை முத்தம்’ என்றார். (9)

நளன், தமயந்திக்குச் சோலையின் அழகைக்காட்டிக் கூறல்

188. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக்-கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை அழகு.

(இ - ள்.) அல் என்ற சோலை அழகு - (ஞாயிற்றின் ஒளி உள்ளே செல்ல இயலாத அடர்த்தியினால்) இருளென்றே பார்த்தோர் கூறத்தக்க சோலையின் அழகானது, அம் மலர் மேல் கொம்பு - அழகிய மலரையுடைய உயர்ந்த கிளைகள், அலர்ந்த மலர் சிந்தி - தம்மிடத்தே மலர்ந்துள்ள பூக்களைக் கீழே உதிர்த்துச் சிதறி, புலர்ந்து அசைந்து - வாடியசைதலால் (அக்காட்சி), பூஅணைமேல் - மலர்ப் படுக்கையின்மேல், புல்லிக் கலந்து ஒசிந்த - (தம் நாயகரைத்) தழுவிப் புணர்ந்து வாட்டமுற்றிருக்கின்ற, புல் என்ற கோலத்துப் பூவையரைப் போன்றது - அழகொளி குறைந்திருக்கின்ற மங்கையர்கள் போலக் காட்சியளிக்கின்றது. (பார்)

(க - து.) ‘சோலைகளிலுள்ள மரக்கிளைகள் மலர்களைச் சிந்தி அவைகளின்மேல் ஆடுதல், பூவணைமேல் தங்கள் நாயகரைப் புணர்ந்து வாடியிருக்கும் பெண்கள் போன்றிருக்கின்றது பார் என்றான்’ என்பதாம்.

(வி - ரை.) பூக்கள் பரப்பிய மெத்தையின்மேல் பெண்கள் தம் காதலருடன் கலந்து எழுந்தபோது, கூந்தல் மேலும் கழுத்தினும் அணிந்திருந்த மலர்மாலைகள் சிதைந்து கீழேவிழ, கூந்தல் சோர, இடை நுடங்கச் சோர்வுற்று நிற்பது இயற்கை. அது