பக்கம் எண் :

மூலமும் உரையும்227

தொக்க தொகையாகக் கோடலுமாம். ஒரு மூன்று, மூன்று என்னும் தொகைக்கு ஒரு அடையாக வந்ததெனலுமாம். கண்ணான்: குறிப்பு வினையாலணைந்த சினைப் பெயர்; போன்றனள்: இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயர். (12)

நளன், தமயந்திக்கு நீர்விளையாட்டில் நாயகி நாயகன்
செயல்களைக் காட்டல்

191. கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிக்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்கள் அத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல்.

(இ - ள்.) கொழுநன் கொழுந்தாரை நீர்வீச (நீர் விளையாட்டில் ஒருத்திக்குத் தன்) காதலன் செழுமையாகிய ஒழுக்காகப் பாய்கின்ற துருத்தி நீரினை (மேலே) சிதற, கூசி - (அதனால்) வெட்கமடைந்து, கெழுமிய அக் கோமகற்கு - அன்பு பொருந்திய அந்த மேன்மைமிக்க கணவனிடத்துள்ள, தான் நினைந்த குற்றங்கள் அத்தனையும் - தான் கருதிய குறைகளெல்லாவற்றையும், பூமகட்கு சொல்லுவாள் போல் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளுக்குச் சொல்பவள்போன்று, செழுமுகத்தை தாமரைக்கே சேர்த்தாள் - தன்னுடைய அழகிய முகத்தை (அத்திருமகள் வாழும்) தாமரை மலரில் அணைத்தாள்.

(க - து.) ‘ஒருத்தி நீர் விளையாட்டில் தன்மீது தன் காதலன் பாய்ச்சிய துருத்தி நீருக்கு வெட்கமுற்றுச் செந்தாமரை மலர்மீது தன் முகத்தை அணைத்த காட்சி, தன் கணவன்மேல் தான் கருதிய குற்றத்தை அம்மலரில் வாழும் திருமகளுக்குச் சொல்வாள்போன்றிருந்தது’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) ஆடவரும் மகளிரும் நீரில் விளையாடுகின்றனர்; அதில் ஒரு காதலன், தன் காதலியின்மீது நீர்த்துருத்தியினால் நீரைப் பிலிற்றுகின்றான்; அதைப் பொறாது நாணங்கொண்டு தலை கவிழ்ந்த காதலி, செந்தாமரை மலர்மீது தன் முகத்தை வைத்து மறைக்கின்றாள். அக்காட்சி, தாமரைமலரில் வீற்றிருக்கும் திருமகளிடம் தன் காதற்கணவன் குறைகளை எடுத்துச் சொல்வது போன்றிருந்தது. பெண்கள் தமக்கு ஏற்காத செயல் நிகழ்ந்தால் நாணமுறுவது இயல்பு. அதனானே அவர்கட்கு,