1‘உயிரினும் சிறந்தன்றுநாண்’
என்றார் தொல்காப்பியனாரும்.
2‘...என்னொடும் வளர்ந்த பொற்பார் திருநாண்’
எனவும்,
3‘என் கண்மணிபோன்று
ஒருநாள் பிரியாது உயிரிற் பழகி உடன்வளர்ந்த
அருநாண்’
எனவும், போற்றியுரைப்பர்
மணிமொழிப் பெருமானும் தலைவி வாயிலாக. இங்கே
தன் காதலன் நீர் பிலிற்றியதைப் பொறாது
நாணித் தலைகவிழ பக்கலில் தாமரை மலர்கள்
பூத்திருத்தலால் அதில் அவள் முகம் படிந்தது.
அக்காட்சியை எழுது சித்திரம் போற் படமாகப்
பிடித்து ஆசிரியர் சொல்லோவியமாகப் ‘பூமகட்குச்
சொல்லுவாள்போல் தாமரைக்கே செழுமுகத்தைச்
சேர்த்தாள்’ என்றார்.
தாமரைக்கே, கோமகற்கு என்பன, ஏழனுருபு
நான்கனுருபாக மயங்கிய வேற்றுமை மயக்கம்.
4‘யாதன் உருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கில் வேற்றுமை
சாரும்’
என்பது தொல்காப்பிய விதி ஆகலான்,
ஏழனுருபுவிரித்துப் பொருள் கூறப்பட்டது. பூமகள் -
திருமகள். பூ எனப் பொதுப் படக் கூறினாரேனும்,
சிறப்புப்பற்றிச் செந்தாமரை மலரையே குறித்தது.
பெண்கள் தம் உள்ளத்திலுள்ள
கருத்தைத் தம் போன்ற பெண்களிடமே கூறுவது
மரபாகலான், இவள் முகத்தைத் தாமரை மலரில்
சாய்த்து நின்றது, அதில் இருக்கும் திருமகளிடம்
தன் கணவனுடைய குறைகளைக் கூறி ஆற்றுதல்
போன்றிருந்ததென்க. (13)
நளன், மற்றொருத்தியின் செயலைத்
தமயந்திக்குக் கூறல்
192. பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல் - எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்த்துவக்கும் சேய்.
1. தொல் : 1059. 2, 3. திருக்கோவையார் : 208; 44.
4. தொல் : 590.
|