பக்கம் எண் :

மூலமும் உரையும்229

(இ - ள்.) மாற்றாரை வென்று - பகைவரைக்கொன்று வெற்றிகொண்டு, செருவாளை பார்த்து உவக்கும் சேய் - போர் வாட் படையைப் பார்த்து அதனால் மகிழ்ச்சி கொள்கின்ற முருகனனைய நளமன்னன், பொய்தல் - விளையாட்டாக, கமலத்தின்போது இரண்டை - இரண்டு செந்தாமரை மலர்களை, காது இரண்டில் பெய்து - தன் காதுகள் இரண்டிலும் செருகிக் கொண்டு, முகம் மூன்று பெற்றாள் போல் - மூன்று முகங்கள் கொண்டவள் போன்று, எய்த வருவாளை பார் என்றான் - நம்மை நெருங்கி வருகின்றவளைப் பார் என்று கூறினான்.

(க - து.) ‘ஒருத்தி விளையாட்டாகத் தன் காதுகள் இரண்டினும் தாமரை மலர்களைச் செருகிக்கொண்டு, முகம் மூன்றுடையாளென்னும்படி நம்மை நோக்கி வருகின்றவளைப் பார்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) பொய்தல் - விளையாட்டு. கமலம் : ஈண்டு ஒன்றொழி பொதுச் சொல்லாய்ச் செந்தாமரையையே குறித்தது. ஒருத்தி தன் காதுகளில் செந்தாமரைமலரைச் செருகிக்கொண்டு செல்வது, தாமரை மலரை முகத்துக்கு உவமை கூறுதல் ஆன்றோர் மரபாகலான், தன் இயற்கை முகத்தோடு செயற்கை முகமாக இரண்டு மலர்களும் தோன்றுகின்றன. அதனை வியப்புடன் நளன், தன் காதலியாகிய தமயந்திக்கு ‘முக மூன்று பெற்றாள்போல்’ என்று சுட்டிக் காட்டினான்.

கொலையிற் கொடியாரையும் பகைவர்களையும் வென்று தன் கொற்றத்தை நிலைநாட்டி எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் கோல் முறை கோடாக் கொற்றவனாக நளமன்னன் இருத்தலால் ‘மாற்றாரை வென்று’ என அடைகொடுத்து, தன் கருவிகள் தனக்கு உதவி செய்யின் அதனை வியந்து பாராட்டுவது அதற்குரியார் செயலாதலான், இங்கே நளமன்னனும் தன் வெற்றிக்கு நிலைக்களனாக அமைந்த வாளைப்பார்த்து மகிழ்ந்தான் என்பாராய்ச், ‘செருவாளைப் பார்த்துவக்கும் சேய்’ என அழகுற அமைத்துக் கூறினார், புகழேந்தியார். (14)

நளன், தமயந்திக்கு நீர்விளையாட்டின்போது
தன் மனையாளைக் காணாது மயங்குவோனைக் காட்டல்

193. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த-மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிகம் என்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்.