பக்கம் எண் :

230நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

(இ - ள்.) பொன் உடைய வாசப் பொகுட்டு மலர் அலைய - பொன்னிறமுள்ள பூந்தாதின் மணத்துடன் கொட்டையையுமுடைய தாமரை மலர்கள் அலையும்படி, தன் உடனே மூழ்கி தனித்து எழுந்த-தன்னோடு நீரில் குளித்துத் (தான் எழும்முன்பு) தனியாக மேலெழுந்த, மின் உடைய பூணாள் திருமுகத்தை - ஒளி பொருந்திய அணிகளணிந்த தன் நாயகியின் அழகிய முகத்தினை, புண்டரிகம் என்று அயிர்த்து - (அப் பொய்கையிலுள்ள தாமரைமலர்களில்) இதுவும் ஓர் தாமரைப்பூ வென்று கருதி ஐயங்கொண்டு, காணாது அயர்வானை காண் - அவளைக் காணாமல் வருந்துகின்ற இவனை நீ காண்பாயாக.

(க - து.) ‘தன்னுடனே கூடக் குறித்துத் தனக்கு முன் எழுந்த தன் நாயகியின் முகத்தை, அவள் நாயகன் தாமரை மலரெனக் கருதித் தன் நாயகியைக் காணாமல் வருந்துகின்றவனை நீ பார் என்றான்,’ நளமன்னன் என்பதாம்.

(வி - ரை.) நீராடுங்கால் நீர்க்குள் மூழ்கி நெடுநேரம் வரை இருக்க விரும்புவது நீரில் மூழ்கி விளையாடுவாரது இயல்பு. அவ்வாறே தன் நாயகியோடு நீர் விளையாடிய ஒருவன், நீரில் குளித்து நெடுநேரம் இருப்ப, அவனுடன் மூழ்கிய நாயகி மூச்சுத் தாங்க இயலாளாய் அவனுக்குமுன் எழுந்து தலைமட்டும் தோன்றத் தாமரை மலர்கள் பூத்துள்ள பக்கலில் நின்றாளாகப், பின் எழுந்த அவள் நாயகன், அவள் முகத்துக்கும் தாமரை மலருக்கும் வேற்றுமை யறிய வொண்ணாதவனாய் அவளைக் காணாமல் வருந்தினான் என அவ்வியப்புச் செயலைத் தமயந்திக்குக் காட்டினான். பொன் - திருமகள் வாழ்கின்ற என்று பொருள் கொள்ளலுமாம். பொகுட்டு - தாமரைக் கொட்டை. முகத்துக்கும் தாமரை மலருக்கும் வேற்றுமை யுணராமல் மயங்குதலால் மயக்கவணி. அயிர்த்தல் - ஐயங்கொள்ளுதல். நீரிற் குளித்து விளையாடலைக் 1‘குளித்து மணற்கொண்ட கல்லா இளமை’ என்றார் பிறரும். (15)

நளன், தமயந்திக்கு மற்றொருத்தியைக் காட்டிக் கூறல்

194. சிறுக்கின்ற வாள் முகமும் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையாய் ஆம்.

1. புறம் : 243.