|
(இ - ள்.) அரும்புஆம் பணைமுலையாய் -
தாமரை யரும்பை யொத்த பெருத்த
கொங்கைகளையுடையவளே! சிறுக்கின்ற வாள் முகமும் -
இப்பெண்ணினுடைய சிறிதாகச் சுருங்கியுள்ள
ஒளியுள்ள முகமும், செம் காந்தள் கையால் - சிவந்த
காந்தள் மலர் போன்ற தன் கைகளினால், முறுக்கு
நெடுமூரிக்குழலும் - (இது காலை) முறுக்கி நீரைப்
பிழியப்படுகின்ற சிறப்பு மிக்க கூந்தலும்,
குறிக்கின் - ஒப்புநோக்கிப் பார்த்தால்,
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட
காட்சிஆம் - இராகுவென்னும் கருநிறப் பாம்பானது,
வெண்மை ஒளியுள்ள சந்திரனைப் பற்றிப் பிடிக்கும்
தோற்றம்போல் இருக்கின்றதாகும்.
(க - து.) ‘நீராடிக் கரையேறிய
பெண்ணொருத்தி, தன் கூந்தலிலுள்ள நீரைப்
பிழிந்து நிற்கின்ற காட்சி, சந்திரனை இராகு
விழுங்கும் தோற்றம்போல் இருப்பதைப் பார்’
என்று நளமன்னன் தமயந்திக்குக் காட்டினான்
என்பதாம்.
(வி - ரை.) அரும்பு - தாமரை அரும்பு.
இது தமயந்தியின் கொங்கைகட்கு ஒப்பாகக்
கூறப்பட்டது. பெண்கள் நீராடிக் கரையேறியபோது
கூந்தல் முகம் மறைய விரிந்துகிடக்கும்.
அக்கூந்தலைக் கையாற்கோதி அணைத்து அதிலுள்ள
நீரைப் பிழியுந் தோற்றம், கிரகண காலத்தில்
சந்திரனை இராகு விழுங்குவதுபோல் தோன்றுவதாகக்
குறித்துத் தமயந்திக்கு நளமன்னன் காட்டினான்.
கூந்தல் சிதர்ந்து கிடக்கின்ற முகத்தைச் ‘சிறுக்கின்ற
வாள்முகம்’ என்றார். இராகுவின் நிறம்
கருநிறமாதலால் ‘கரும்பாம்பு’ என்றார்.
1‘கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று’
என்றதூஉம் காண்க. திங்கள்
முகத்துக்கும் கூந்தல் கரும்பாம்புக்கும் உவமமாக
வந்தது. (16)
நளன், தமயந்திக்கு நீரில் மூழ்கிவரும்
வேறொருத்தியைக் காட்டல்
195. சோர்புனலின் மூழ்கி எழுவாள் சுடர்நுதல்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் - பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு.
1. திருக்குறள் : 1146.
|