|
(இ - ள்.) சோர்புனலின் மூழ்கி
எழுவாள் - ஓடுகின்ற நீரில் குளித்து
எழுந்திருப்பவளுடைய, சுடர் நுதல்மேல் - ஒளிமிக்க
தன் நெற்றியின்மீது, வார்குழலை நீக்கி வரும்
தோற்றம் - படிந்துள்ள கூந்தலை ஒதுக்கிக்கொண்டு
வருகின்ற காட்சி, மேகத்து இடையே விரைகொண்டு
எழுந்த பிறை பொற்பு - மேகத்திற்கு ஊடே விரைவில்
தோன்றிய நிலாப்பிறையினது அழகை, புரைகின்றது
என்னல்ஆம் பாராய் - ஒத்திருக்கின்றதென்று
சொல்லலாம்; நீ காண்பாயாக.
(க - து.) ‘நீரில் குளித்துவரும்
இம்மங்கை தன் நெற்றியிற் படிந்துள்ள கூந்தலைத்
தன் கைகளினால் ஒதுக்கிக்கொண்டு வருகின்ற
காட்சி, மேகத்தின் நடுவே விரைந்துதோன்றும்
நிலாப் பிறையைப்போல் காண்பதை நீபார்’ என்று
நளமன்னன் தமயந்திக்குக் காட்டினான் என்பதாம்.
(வி - ரை.) நீரில் மூழ்கி வருபவள்,
தன் நெற்றியிற் படிந்து கிடந்த கூந்தலை
ஒதுக்கிக் கொண்டுவருவது, மூன்றாம் பிறை
மேகத்திடையே தோன்றுவதுபோற்
காட்சியளிப்பதாகக் குறித்தார். சோர்தல் -
பாய்தல் : ஓடுதல். எழுவாள்: எதிர்கால
வினையாலணையும் பெயர். புனைதல் - ஒத்திருத்தல்.
பொற்பு - அழகு. (17)
நளன், தமயந்திக்குக் கழுநீர்மலர்
கொய்வாளைக் காட்டல்
196. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை
கொய்வாள்
முழுநீலம் என்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேல்தடக்கை மன்.
(இ - ள்.) வை ஆரும் வேல்தடக்கைமன்
- கூர்மை பொருந்திய வேலை யேந்திய பெரிய
கைகளையுடைய நளமன்னனானவன், செம்குவளை கொள்வாள்
- சிவந்த கழுநீர்மலரைக் கொய்கின்ற ஒருத்தி,
செழுநீலம் நோக்கு எறிப்ப - குளிர்ச்சி மிக்க
கருங்குவளை மலர் போன்ற தன் கண்பார்வையொளி
அதன்மேற்படிய, முழுநீலம் என்று அயிர்த்து -
நிறைந்த கருங்குவளை மலரென அதனை ஐயங்கொண்டு,
முன்னர் கழுநீரை கொய்யாது போவாளை - தன்
முன்னுள்ள செங்கழுநீர் மலரினைப் பறிக்காமல்
செல்கின்றவளை, கோல்வளைக்குக் காட்டினான் -
அழகிய. வளையலையணிந்த தமயந்திக்குக்
காண்பித்தான்.
|