|
(க - து.) நளமன்னனானவன், ‘செங்குவளை
மலர் பறித்துக்கொண்டிருந்த ஒருத்தி தன்
கண்ணொளி பாய்ந்து கருநிறங்காட்ட, அதனைக்
கருங்குவளை மலரென ஐயங்கொண்டு தன் முன்னருள்ள
அதனைப் பறிக்காமல் செல்வதைப் பார்’ என்று
தமயந்திக்குக் காட்டினான் என்பதாம்.
(வி - ரை.) செழுநீலம் - குளிர்ச்சி
மிக்க நீலம் : அந்நிறமுடைய கண்கட்கு ஆதலால்
ஆகுபெயர். ஓர் பெண்ணின் கண்ணின் கருநிறம்,
மலரையும் தன்னிறமாக்கிற்றென கண்ணின்
மேன்மையைச் சிறப்பித்தவாறாம். கோல்வளை :
பண்புத்தொகை நிலைக் களத்துப்பிறந்த
அன்மொழித் தொகை. வை - கூர்மை. வேல் தடக்கை -
வேலேந்திய கை. வீரர்கட்குப் படைகளே
அணியாகலின், இங்கே நளமன்னன்
வீரச்சிறப்புக்காகக் குறித்தார்.
1‘கழலிலாக் காலும் கால அயிலிலாக்
கையும் காந்தும்
அழலிலாக் கண்ணும் இல்லா ஆடவர்
இல்லை’
என, இலங்கை வேந்தன் படைஞர் சிறப்பை
அனுமான் வாயிலாகக் கம்பர் அமைத்துக் காட்டியதும்
அறியற்பாலது. (18)
நளனும் தமயந்தியும் கங்கையில்
நீராடுதல்
197. காவி பொருநெடுங்கண் காதலியும் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி ஆடி
ஒழியா துறைந்தார் உவந்து.
(இ - ள்.) காவி பொருநெடுங்கண்
காதலியும் காதலனும் - கருங்குவளை மலரையொத்த
நீண்ட கண்களையுடைய நாயகியாகிய தமயந்தியும்
நாயகனாகிய நளமன்னனும், வாவியும் ஆறும் குடைந்து ஆடி
- (மேற்கூறியவாறுள்ள காட்சிகளையெல்லாம்
பார்த்துக்கொண்டே சென்று) குளங்களிலும்
ஆறுகளிலும் நீரினை அசைத்து அசைத்து மூழ்கி, தேவின்
கழியாத சிந்தையுடன் - இறைவனை மறவாத
எண்ணத்தோடு, கங்கைநதி ஆடி - கங்கை நீரில் முழுகி,
உவந்து ஒழியாது உறைந்தார் - (அங்கோர்
பொழிலில்) மகிழ்ந்து (அன்பு) குறையாமல்
தங்கினார்கள்.
1. கம்பரா, ஊர்தேடு : 36.
|