|
அல்குல் தேம் மொழியாய் - பெரிய
அல்குலையுடைய இனிய மொழியாளே ! மென்முறுவல் பொன்
தொடியாய் - புன்சிரிப்புப் பொருந்திய
பொன்னானியன்ற தோள்வளையுடையாளே ! இப்பொழில்
- இந்தச் சோலையானது, நறை ஒழுக வண்டு உறையும்
நல்நகர்வாய் - (சோலைகளில்) தேன் ஒழுகுவதால்
வண்டுகள் தங்கியிருக்கின்ற வளநலனிறைந்த
மாவிந்தமாநகரத்தில், நாங்கள் உறையும் இள மர கா
ஒக்கும் - நானும் எனக்குரிய நண்பர்
முதலியோர்களும் கூடி இருக்கின்றதான இளமரங்கள்
நிறைந்த சோலையைப் போன்றிருக்கின்றது.
(க - து.) ‘இச்சோலை, நானும் என்
நண்பர்களும் தங்கி இருக்கின்ற
மாவிந்தமாநகர்க்கண் உள்ள தேனொழுகுவதால்
வண்டுகள் உறைகின்ற சோலைபோன்றிருக்கின்றது’
என்று தமயந்திக்கு நளமன்னன் கூறினான் என்பதாம்.
(வி - ரை.) தமயந்தியை மும்முறை
விளித்தான், அவள் பாற்கொண்ட ஆராக்
காதலினால். கோவலனாரும் கண்ணகியாரைப்
பாராட்டுமிடத்து,
1‘மாசறு பொன்னே ! வலம்புரி முத்தே
காசறு விரையே ! கரும்பே ! தேனே !
அரும்பெறல் பாவாய் ! ஆருயிர் மருந்தே !
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே !’
என்று தன் அன்புதோன்றப் பன்முறை
விளித்துப் பாராட்டியதும், அயோத்தியேந்தல், மிதிலைச்செல்வியுடன்
காட்டிலுறைந்தகாலை, வனக்காட்சியைக் காட்டி.
2‘ஒருவில் பெண்மையென் றுரைக்கின்ற
உடலினக்குயிரே !’
எனவும்,
3‘குழுவு நுண்தொளை வேயினும் குறுநரம்
பெறிவுற்
றெழுவு தண்டமிழ் யாழினும் இனியசொற்
கிளியே !’
எனவும், பல்வகையாக விளித்துரைப்பதும்
இக்கருத்துக் கொப்ப இருத்தல் போலவென உணர்க.
மென்முறுவல் - புன்சிரிப்பு. மென்மை :
ஈண்டுச் சிறுமையென்னும் பொருட்டு. பொன் தொடி -
தோளிலணியும் வளையல்.
1. சிலப், 2 : 73 - 6. 2, 3. கம்பராமா :
சித்திரகூட : 14; 28.
|