பக்கம் எண் :

238நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

உணர்த்தியவாறாம். உயிர்த்தல் - பெருமூச்செறிதல். காதலானும் சினத்தானும் பிற தாங்கவொண்ணாத வருத்த மேலீட்டானும் மக்கட்குப் பெருமூச்செறிதல் இயல்பு. இங்குத் தமயந்தியும் பிறமங்கையரோடு நம்மன்னன் உறைகின்றானே என்னும் கருத்துத்தோன்றி அதனாற் சினமேலிடப் பெருமூச் செறிந்தாள். அதனை ‘உயிர்த்து’ என்னும் சொல்லால் உணர்த்தினார். (21)

தமயந்தி, நளனுடன் ஊடல்கொள்ளல்

200. தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதல்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக் - கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழல்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி.

(இ - ள்.) கழல் மன்னர் - வீரக்கழலணிந்த பகை வேந்தர்களின், வெள்ளைக் குடை சிவப்ப நின்றான் கொடி - வெண்கொற்றக்குடைகள் போர்க்களத்தில் இரத்தக்கறை படிய வெற்றிகொண்டு நின்றவனாகிய வீமமன்னன் கொம்புபோன்றவளாகிய தமயந்தி, தொண்டை கனிவாய் துடிப்ப - (மேற்கூறியவாறு பிணங்கிச் சினமொழி கூறியபின்) கொவ்வைக்கனி போன்ற வாயிதழ்கள் துடிக்கவும்; சுடர்நுதல்மேல் - ஒளி பொருந்திய நெற்றியின்மீது, வெண்தரளம் என்ன வியர்வு அரும்ப - வெண்ணிற முத்துப்போன்று வியர்வைநீர் தோன்ற, கெண்டை கடைசிவப்ப நின்றாள் - சேல்மீன்போன்ற தன் கண்கள் சினத்தால் செந்நீறமடைய (அசைவற்று) நின்றாள்.

(க - து.) தமயந்தியானவள் உதடு துடிப்ப, நெற்றியில் வேர்வையரும்ப, கடைக்கண் சிவப்பேறச் சினந்து நின்ற படியே நின்றாள் என்பதாம்.

(வி - ரை.) தமயந்தி, ‘இது நீவிர் இருக்கும் சோலை போன்றதோ?’ என்று கேட்டதற்கு நளன் விடை கூறுமுன், அவட்கு ஐயம் மிகுந்து சினம்பொங்கி, அச் சினத்தால் இதழ்கள் துடித்தன; நெற்றியில் வேர்வை நீர்த்துளிகள் அரும்பின; கண்கள் சிவந்தன; எழுது பாவைவோல் ஏங்கி அசைவற்று நிற்பாளானாள் என்க. தொண்டை - கோவைப்பழம் : நிறமும் வடிவும் உவமை. வியர்வையின் வெண்ணிறத்திற்கு முத்தை உவமை கூறினார். கெண்டைபோன்ற கண்ணைக் கெண்டை யென்றது உவம ஆகுபெயர். கொடிபோல்வாளைக் கொடி