சீத மதியும் அரவும்விழும் செயற்கு
மகிழ்செய் யாமலலை
மாது பணியும் அதற்குமனம் மகிழும்
உமையை வணங்குவாம்’
என்பதாகும். கம்பர் தாம் அமைத்த
இராமாயணப் பெருங்காப்பியத்தில் இலங்கை
வேந்தனை, ஆடவருட் சிறந்த ஆடவனாக, வீரருட்
சிறந்த வீரனாகப் படைத்துக் காட்டுகின்றார்.
ஊடற் காலத்து எத்தகையோரும் தம் காதலியர்
காலடிகளில் பணிவரென்பது, இந் நூற்பாட்டினானும்
மேற் குறித்த பாட்டினானும் வேறு பிற வரலாறுகளினானும்
அறியக்கிடக்கின்றது. ஆனால், கம்பர் காட்டும்
வீரன் எவ்வாறுளன் எனின்? அவன், காதலியர் மாட்டும்
வணங்காத மணிமுடியான் என்கின்றார்.
1‘..................வென்றி மாதர்’
வலியநெடும் புலவியினும் வணங்காத
மகுடநிரை வயங்க’
என, அவன் முடிமேல் வைத்துக்
காட்டுகின்றார்.
குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து
நிறம் பயின்றனவாய் இருத்தலால், தமயந்தியின்
கண்களைச் ‘செழுநீலம்’ என்றார். ஆகுபெயர்.
சிவப்பு - சினத்தால் தோன்றிய சிவந்த நிறம்.
மாறா - மாறி: செய்யாவென்னும் வாய்பாட்டு இறந்தகாலத்
தெரிநிலை வினையெச்சம். மலர்ந்த என்னும் வினைப்பெயர்கொண்டு
முடிந்தது.
2‘செய்து செய்பு செய்யாச்
செய்யூச்
செய்தெனச் செயச் செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்கின வினையெச் சம்பிற
ஐந்தொன் றாறுமுக் காலமும் முறைதரும்’
என்னும் நன்னூலார் காட்டும்
வினையெச்ச வாய்பாடுகள் பன்னிரண்டனுள்,
மூன்றாவதாக அமைந்த ‘செய்யா’ வென்னும்
வாய்பாட்டு வினையெச்சமாக அமைத்து ‘மாறா’
என்றார். அது தன் உள்மனத்தால் மாறாததாக
இருப்பினும், மன்னன்றன் செயலுக்கு மாறியது என்னும்
குறிப்புமுணர நின்றது. சினத்தாற் கண்கள்
சிவப்புறுமென்பதற்குப் பகைவரோடு பொருத
அதிகமானஞ்சியின் கண்கள், தன் புதல்வனைப்
பார்த்தபோது கூடக் கோபத்தால் சிவந்த அவன்
கண்களின் செந்நிறம், மாறாதிருந்த
வீரத்திறத்தை ஒளவையார் பாராட்டிக்
கூறுகின்றார்.
1, கம்பரா, மாரீசன் : 4. 2. நன்னூல் : 343.
|