1‘சிறுவனை நோக்கியும் சிவப்பா னாவே’
என்பது காண்க.
ஆசிரியர் இளங்கோவடிகள், கணவன்மார்
விருந்தோடு வந்த காலத்தும், மனைவியர் ஊடலால்
கண் சிவந்து மாறாமல் இருந்ததை,
2‘வடமீன் கற்பின் மனையுற மகளிர்
மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தில் தீர்த்தில தாயின் யாவது
மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்பு’
என்றருள்வதூஉம் காண்க. (24)
தமயந்தி ஊடல்நீங்கி நளனுடன் கூடுதல்
203. அங்கைவேல் மன்னன் அகலம் எனும்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு.
(இ - ள்.) கோதையரின் மேலான
கொம்பு - மங்கையருட் சிறந்த
பூங்கொம்புபோல்வாளாகிய தமயந்தியானவள், அம்
கைவேல் மன்னன் - அழகிய கையினிடத்து வேலைத்
தாங்கிய நளமன்னனுடைய, அகலம் எனும் செறுவில் -
மார்பாகிய வயலிடத்து, கொங்கை ஏர் பூட்டி - தன்
கொங்கைகள் என்னும் ஏரினைப் பூட்டி உழுது, குறுவியர்
நீர் அங்கு அடைத்து - சிறு வியர்வையாகிய தண்ணீரை
அவ் வயலில் பாய்ச்சி நிரப்பி, காதல் வரம்பு
ஒழுக்கி - காதல் என்னும் வரப்பினை ஒழுங்குபடுத்தி
அமைத்து, காம பயிர் விளைத்தாள் - காமமாகிய
நெற்பயிரை விளையச் செய்தாள்.
(க - து.) தமயந்தி, ஊடல்
தணிந்தபின் நளன் மார்பில் தன் கொங்கைகள்
அழுந்தத் தழுவிச் சிறு வியர்வை நீர் அரும்பக்
காதலை உண்டாக்கிக் காமத்தை மிகுதிப்படுத்திக்
கூடினாள் என்பதாம்.
1. புறம் : 100. 2. சிலப், 5 : 229-33.
|