1‘இன்துணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலம்’
என்று பிறருங் கூறுதலான் என்க. எனவே
தமயந்தி கற்பினும் பொற்பினும்
தன்னிகரில்லாத் தகையளாக இருத்தலால் பெண்களுட்
சிறந்தாளாக உரைத்தார். (25)
தமயந்தியும், நளனும்
கங்கையாற்றங்கரையைக் காண்டல்
204. வேரி மழைதுளிக்கும் மேகக் கருங்கூந்தற்
காரிகையும் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்
திரையேற மென்கிடங்கில் சேலேற வாளை
கரையேறும் கங்கைக் கரை.
(இ - ள்.) மூரி திரை ஏற -
வலிமைமிக்க நீரலைகள் மேலேறிவர,
மென்கிடங்கில் சேல் ஏறு - அதனால் மெல்லிய
அகழிகளில் (கழிக்குழிகளில்) கெண்டைமீன்கள்
மேலேறியோட, வாளைகரை ஏறும் கங்கைக்கரை - வாளை
மீன்கள் தாவிக் கரையிற் குதிக்கின்றதான
(வளமிக்க) கங்கையாற்றின் கரையை, வேரிமழை
துளிக்கும்-(பூவிலுள்ள) தேனாகிய மழையை
ஒழுக்குகின்ற, மேக கருங்கூந்தல் காரிகையும் -
மேகத்தையொத்த கருநிறம் பொருந்திய
கூந்தலையுடைய தமயந்தியும், தானும்போய் கண்
உற்றான் - நளமன்னனும் இக்கரை கடந்துபோய்
அக்கரையைக் கண்டார்கள்.
(க - து.) நளனும் தமயந்தியும்,
திரையேற, சேற்கெண்டைகள் கழிக்குழிகளில் ஏற,
வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் கரையேறுகின்ற
தன்மையதான கங்கையாற்றின் இக் கரையைக் கடந்து
அக்கரையைக் கண்டார்கள் என்பதாம்.
(வி - ரை.) வேரி - தேன். தமயந்தி
பல்வகை மணமலர்களைக் கூந்தலிற் சூடியிருத்தலால்
அதிலிருந்த தேன் வழிந்தோடுகின்றது; அதனை, ‘மழை
துளிக்கும்’ என்றார். கூந்தலை மேகம்
என்றதற்கேற்பத் தேனொழுகுதலை மழையென்றது, இன்ப
நயனாக இருத்தலை அறிக. ‘மேகக்கருங் கூந்தல்’
என்பதனை உவமத் தொகையாகக் கொள்ளாது,
இருபெயரொட்டுப் பண்
1. சிலப், 15 : 142 - 4.
|