|
தோறும் கட்டியிருக்கின்ற கொடிகள்
அசைந்தாட, தான் தோன்றும் இத் தடம்பதிதான் -
(மற்றவற்றிற்கு மேலாகத்) தனித்துத் தெரிகின்ற
இந்தப் பெரு நகரந்தான், எங்கள் நகர் - எங்களது
மாவிந்தமென்னும் மா நகரமாகும்.
(க - து.) ‘வீமன்குல விளக்கே!
வானளாவிய உயர்ந்திருக்கின்ற மாளிகைகள்தோறும்
கொடிகள் அசைந்தாடத், தானே தனித்துத்
தோன்றுகின்ற இப் பெரிய நகரமே, எங்களது மாவிந்த
மாநகரமாகும்’ என்பதாம்.
(வி - ரை.) வான்தோன்றி
என்பதற்கு, வானளவும் விளங்கி என்று
வினையெச்சமாக்கிப் பொருள் கூறுவாருமுளர்.
தோன்றி-செங்காந்தள். விளக்குப்போல்
செந்நிறமாக மலர்கின்ற பூக்களை விளக்கென்றது,
ஆகுபெயர். அதனால விதர்ப்ப நாட்டு வளங்கூறியவாறு,
அத்தகைய சிறப்புமிக்க நகருக்கு வேந்தனான ‘வீமன்
நல்விளக்கு’ என்றான், மகளிர்க்குரிய நாணம்
மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நால்வகைக்
குணங்களும் அமைந்து அந்தக் குணங்களால்
சிறந்தாளெனப் புகழொளியும், அவள் உடலின்
நல்லழகொளியும் மிக்குள்ளமைதோன்ற. முன்னரும், ‘வீமன்
குலத்துக்கோர் மெய்தீபம்’ என்றதை, ஈண்டும்
வலியுறுத்தினாரென்க.
தன்னுரிமை பெற்றிலங்கும் ஒரு நாட்டில்
மேன்மாடங்கள் தோறும் அவர் குறிக்கோள் உருவம்
எழுதிய கொடிச்சீலைகள் மேலாக உயர்த்தப் பெற்று
அசைவதை எங்கும் காண்டுமன்றே. அது போன்றே
மாவிந்த நகர்க்கண் கொடிகள் நின்றிலகுவதைத்
தமயந்திக்கு நளன் கூறினான் என்க.
1‘செருப்புகண் றெடுத்த சேணுயர்
நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடல்’
என்றார் நக்கீரனாரும். தடம்பதி -
பெரிய நகரம் : வானளாவ உயர்ந்த மாட வரிசைகளும்
கடைகளும் நிறைந்த நீண்ட ஆறு கிடந்தன்ன அகல்
நெடுந் தெருக்களையுடைய நகரம் என, மாவிந்தத்தின்
சிறப்புக் கூறியவாறு. (28)
1. திருமுருகு : 67-71.
|