பக்கம் எண் :

250நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

நளன், தமயந்தியுடன் பன்னிரண்டாண்டுவரை
வாழ்தல்

207. பொய்கையும் வாசப் பொழிலும் எழிலருவிச்
செய்குன்றும் ஆறும் திரிந்தாடித் - தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தான் அடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ.

(இ - ள்.) அடையலரை கூறு இரண்டு ஆ கொல் யானை கோ - தன் பகைவர்களை உயிர்வேறு உடல்வேறாகப் பிரித்து இரண்டு பகுதிகளாகும்படி கொல்கின்ற யானைப் படையையுடைய நளமன்னன், தையலுடன் - தன் காதற் கிழத்தியாகிய தமயந்தியோடு, பொய்கையும் வாசப் பொழிலும் - குளங்களிலும் (மலர்) மணம் பொருந்திய சோலைகளிலும், எழில் அருவிச் செய்குன்றும் - அழகிய அருவி நீரைப் பெருக்குகின்ற மலைகளிலும், ஆறும் திரிந்து ஆடி - ஆறுகளினும் சென்று சென்று இன்பத்துடன் மூழ்கி விளையாடல் கொண்டு, ஆறு இரண்டு ஆண்டு எல்லை கழித்தான் - பன்னிரண்டாண்டுக்காலம்வரை (மகிழ்ச்சியாகப்) பொழுது போக்கினான்.

(க - து.) நளமன்னன், தமயந்தியோடு தடாகங்களினும் சோலைகளினும் மலையருவிகளினும் ஆறுகளினும் சென்று சென்று மூழ்கி, விளையாடல்கொண்டு, இன்பமாகப் பன்னிரண்டாண்டுக் காலம்வரை வாழ்ந்தான் என்பதாம்.

(வி - ரை.) செய்குன்று - விளையாடுதற்குக் கட்டப்பட்ட செயற்கைமலை என்றும் பொருள் கொள்ளலுமாம். அருவி எனவருதலால், அருவிகள் வருதற்குரியது மலைகளென்று ஈண்டுப் பொருள் உரைத்தாம். அடையார் - பகைவர். யானை குதிரை தேர் காலாள் என்னும் படைகள் நான்கனுள், யானைப் படை சிறந்ததாகலானும், விரைந்து தன் வலிமையினால் சிறிதும் வருத்தமின்றி அழிக்கும் தன்மையுடையதாகலானும், யானைப் படையையே முதன்மையாகக்கொண்டு ‘கொல் யானைக்கோ’ என்றார். கொல்யானை: முக்கால வினைத்தொகை. யானை என்பது அதனானாகிய படையை உணர்த்தலால் காரியவாகுபெயர். கூறு இரண்டு - இரண்டு கூறு : சொன்னிலை மாறிய இலக்கணப் போலி. இரண்டு கூறாக்கலாவது, பகைவர்தம் உடலையும் உயிரையும் பிரித்துத் தனித் தனியாக்கிக் கொல்லுதல். அன்றித் தலைவேறு, உடல் வேறாகத் துண்டாக்குதல் என்று கூறலுமாம். (29)