பக்கம் எண் :

மூலமும் உரையும்251

தமயந்தி குழந்தைகளைப் பெறுதல்

208. கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்
தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி இரண்டு.

(இ - ள்.) கோலம் நிறம் விளர்ப்ப - அழகிய உடலின் வண்ணம் வெளுத்த நிறங் காட்டவும், கொங்கை முகம் கருக - கொங்கைக் காம்புகள் கருமை நிறம் பெறவும், மயிர்க்கால் நீல நிறம் நின்று எறிப்ப - மயிர்களின் அடியிடத்தில் நீல நிறமானது நிலைபெற்று ஒளி வீசவும், நூல் என்ன - நூலென்னும்படியான, தோன்றாத நுண்மருங்குல் தோன்ற - (மிக மென்மையானதாகக் கண்களுக்குப்) புலப்படாத நுட்பம் பொருந்திய இடையானது (சிறிது பெருத்துப் பார்ப்பவர் கண்களுக்கு) வெளித்தெரியவும் (கருப்பமுற்று), சுரிகுழலாள் குழவி இரண்டு ஈன்றாள் - சுருண்ட கூந்தலையுடைய தமயந்தியானவள் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள்.

(க - து.) நளனுக்கும் தமயந்திக்கும் திருமணம் ஆகிப் பன்னிரண்டாண்டுகளுக்குப்பின், தமயந்தி கருவுற்று இரண்டு குழந்தைகளைப் பெற்றாள் என்பதாம்.

(வி - ரை.) கருவுற்ற பெண்களுக்கு உடல் நிறம் வெளுத்தலும், கொங்கைக் கண்கள் மிகக் கருநிறங்கொள்ளலும், இடைபருத்துத் தோன்றலும் இயல்பாகக் கருவுற்றதைக் காட்டும் அறிகுறிகள். அவைகளை முறையே (கோல நிறம்...தோன்ற’ என்ற சொற்களினால் விளக்கினார்.

இவ்வாறே மாயையைக் கருவுற்றகாலத்து, மோகினி யென்பாள்,

1‘முத்தணி கொங்கை முகங்கள் கறுத்தாள்
மெய்த்திரு மேனி விளர்த்து நரம்பு
பைத்தன மீது பரப்ப இருந்தாள்
பொய்த்துயில் கொண்டு புளிக்கும் உவந்தாள்’

எனப், பிரபுலிங்க லீலையினும் வருதல் காண்க.

1. பிரபு. மாயை உற் : 27.