|
கோல நிறம் - அழகாகப் பொன்போல் தோன்றும்
உடலழகு. நீலம் - கருமை. 1‘நீனிற முகிலோ பசிய சைவலமோ’
என்னும் நைடதச் செய்யுளில், நீலம் கருமை என்னும் பொருள் தருதலை
உணர்க. சுரிகுழல் : வினைத்தொகை. குழவி - குழந்தை. ‘குழ’
என்னும் இளமைப்பொருள் குறிக்கும் பண்படியாகப் பிறந்த
பெயர்.
2‘மழவும் குழவும் இளமைப் பொருள’
என்பது தொல்காப்பியம். (30)
கலிமகன், பன்னிரண்டாண்டுவரை நளனைத்
தொடரக்
காலம் பார்த்திருத்தல்
209. ஆண்டிரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியும் காண்கிலான்-நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு.
(இ - ள்.) வெம்கலியும் -
கொடுமையுள்ள கலிமகனும், காண்தகைய -
காணுதற்கேற்ற, ஆண்டு இரண்டு ஆறு எல்லை அளவும்
திரிந்தேயும் - (மிக்க காலமாகிய) ஆண்டுகள்
பன்னிரண்டுவரை பின்பற்றித் திரிந்தும்,
நீண்டபுகழ் செம்நெறியால் பார்காத்த -
பெரும்புகழோடு அறமுறையால் உலகைப் பாதுகாத்த,
செங்கோல் நிலவேந்தன் - செங்கோற்
சிறப்பினையுடைய நிடதநாட்டு மன்னனாகிய
நளமன்னனின், தன் நெறியால் வேறு ஓர் தவறு
காண்கிலான் - அவன் நெறிமுறை திறம்பாத்
தன்மையினால் எந்த வேறுபட்ட ஒரு குற்றத்தையும்
காணமாட்டாதவ னானான்.
(க - து.) கலியானவன்,
பன்னிரண்டாண்டு வரையும் காத்திருந்தும்
நளமன்னன் நெறிமுறை கோடாத நீர்மையினால்
அவனைச் சாரவொண்ணாது இருந்தான் என்பதாம்.
(வி - ரை.) கலி, முன்பு சூளுரைத்தவாறு
நளனையும் தமயந்தியையும் தனித்தனியே பிரித்துத்
துன்புறுத்தக் காலம் பார்த்திருந்தான். அவன்
யாரையும் சார்ந்து துன்புறுத்த எண்ணினால்,
அவரிடம் சீர்முறைக்கேடான செய்கை வேண்டும்.
நளமன்னனிடம் எக்குறையும் காண்பதற்கில்லை.
செங்கோல் முறையில்
1. நைடதம், அன்னத்தைத்தூது : 11. 2.
தொல், உரியியல் : 15.
|