|
காலம். இது காலைப்பொழுது மாலைப்பொழுது
இரண்டுக்கும் பொருந்துவதாகும். இக்காலத்திற் செய்யப்படும்
வழிபாட்டுக்குச் சந்தி யென்றது, காலவாகு பெயர். ‘காரறுத்தது’
என்பதுபோல. தாள் விளக்குதல் - கால்களை விளக்கமுற
அழுக்கின்றிக் கழுவல். மறு - குற்றம்: ஈண்டு நீர்படியாமல். வெளியாக
இருந்த அழுக்குப் படிந்த காலின் இடத்தைக் குறித்தது. ‘மார்பற்
புகைந்து’ என்பதில் இரண்டனுருபு தொக்கு நின்ற வேற்றுமைத்
தொகை. பொன் அசலம்-பொன்மலை; இமயமலை. ‘1பொன்னகலம்
உள்ளுருகப் புல்லாதொழிவேனோ?’ என்றார் பிறரும்.
தம்+ஐயன்
= தமையன் : தனக்கு மூத்தோன் என்பதைக் குறிக்கும்.
ஐயன் - தலைவன், தந்தை முதலியவர்களைக் குறிக்கும்.
‘2என்னை
முன்னில்லன்மின்’ ‘3என்னையர்
சாலவுமூர்க்கர்’ முதலியன, ஆன்றோர் இலக்கியங்களில்
காணப்படுதலை ஓர்க. நளன் தனக்குத் தமையன் முறை
கொண்டு தன்கீழ்ச் சிற்றரசனாக இருந்து ஆளச்செய்த
புட்கரனைக் குறித்தற்கு ஈண்டுத் ‘தமையனுடன் இருந்தான்’
என்றார். (32)
கலி, நளனிடத்திற் சேர்ந்த தன்மை
211. நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல் - பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி.
(இ - ள்.) நாராயணாய நமஎன்று -
நாராயணனுக்கு வணக்கமென்று கூறி, அவன் அடியில்
சேராரை வெம்துயரம் சேர்ந்தாற் போல் - அவன்
திருவடிகளைச் சார்ந்து வழிபடாதவரைக்
கொடுந்துன்பங்கள் யாவும் வந்து சேர்ந்தாற்
போலாக, பாராளும் கொற்றவனை - உலகையெல்லாம்
ஆளுகின்ற வெற்றிவேந்தனை, பார் மடந்தை கோமானை
- நிலமகட்குத் தலைவனை வாய்மைநெறி கற்றவனை -
உண்மை வழியைக் கடைப்பிடித் தொழுகுவோனை,
(இத்தகைய நளமன்னனைக் கால்கள் நன்கு கழுவாத
குற்றத்தைக் கொண்டு) கலி சேர்ந்தான் -
கலியானவன் அடைந்தான்.
(க - து.) நாராயணாய நமவென்று கூறி
அவ்விறைவன் திருவடியைச் சேராதவர்களைக்
கொடுந்துன்பம் சேர்ந்தாற்போன்று, கலி,
நளமன்னனைத் துன்புறுத்த அடைந்தான் என்பதாம்.
1. நைடதம், பிரிவுறு : 17. 2. திருக்குறள் :
771.
3. திருக்கோவையார் : 98.
|