பக்கம் எண் :

மூலமும் உரையும்255

(வி - ரை.) ‘நாராயணா நம’ என்னும் திருப்பெயரை ஓதாதார்க்குத் துன்பஞ் சேர்வது தவறாது ; அதுபோன்று, நளமன்னனைக் கலி சேர்ந்தான் என்று உவமங் காட்டினார். பிற பொருள்கள் பல இருப்பினும் அவைகளை யெல்லாம் உவமங் கூறாது இதனை ஈங்கு உவமங்கூறியது, அவர்தம் திருமால் பற்றினை விளக்குதற்கென அறிக. இவர் இந்நூல் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றுழிச் சிவபெருமான் முருகன் முதலியவர்கட்கு வணக்கங் கூறியிருப்பது, இவர்தம் பரந்துபட்ட பொதுக் கொள்கையை விளக்குகின்றது. ஆனாலும், இவர் தம் அழுந்திய பற்றுத் திருமாலிடமே யென்று கருதக் கிடக்கின்றது. பின்னரும், ‘மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்’, என்றும் நளமன்னனுக்கு வேற்றுருவம் மாறியபோது ‘மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப், புக்கோர் அருவினைபோல் போயிற்றே’ (கலி, நீங்கு : 71) என்றும் கூறுதலால் தெளியலாம்.

இக்கருத்தையே சேரமான் பெருமாணாயனார் தாம் ஆக்கியருளிய திருவாரூர் மும்மணிக்கோவையில் தலைவி வாய்மொழியாகத் தலைவி துன்புறு நிலைக்குச் சிவபெருமான் திருவடியை நினையாதவர் கிளைகள் வருந்துமாறுபோல், வருந்துவதாக அமைந்த பாடலும் இதனோடு ஒப்ப நோக்கி மகிழற்பாலதாம். எனவே, அதனையும் காட்டுவாம் :

1‘தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியாது
ஆழ்ந்து கிடந்து நைவார் கிளைபோல் அயர்வேற்கு’

என்றதூஉம் காண்க.

எத்தகைய தீய செயல்களும் இல்லாதவன் ; முறைசெய்து உலகமக்களைக் காப்பாற்றும் கொற்றவன்; பெருநிலம் முழுதும் தனக்கே உரிமையாகப் பெற்ற கோமகன் ; உண்மைநெறிதவறா உயர்ந்தவன் ; இத்தகைய மன்னனைக் காலில் சிறிது நீர் படாமல் இருந்ததை ஓர் குற்றமாகக் கொண்டானே யெனப் பரிவுடையராய் நளன் சிறப்பைப் ‘பாராளும் கொற்றவனைக் கோமானை, வாய்மைநெறி கற்றவனை’ என்று கூறினார். கலி-கலிமகன். (33)

கலி, புட்கரனை நளனோடு சூதாட அழைத்தல்

212. நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்நேன் - மன்னவனே !
போதுவாய் என்னுடனே என்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றான் எடுத்து.

1. திருவாரூர் மும்மணிக்கோவை : 30.