(இ - ள்.) என்றும் தெரிவன -
(அந்நகரமாந்தர்) என்றைக்கும் ஆராய்ந்தறிவன,
நூல் - (அறிவைப் புகட்டும் நல்ல) நூல்களேயாகும்,
தெரியாதனவும் வரிவளையார் தங்கள் மருங்கே -
(அவர்கட்குத்) தெரியாதவை பல்வகை வரிகள் அமைந்த
வளையலணிந்த பெண்களின் இடைகளேயாகும்,
ஒருபொழுதும் இல்லாதனவும் இரவே - எக்காலத்தும்
இல்லாதவைகள் பிச்சையெடுக்கும் தொழில்களே
யாகும், எவரும் இகழ்ந்து கல்லாதனவும் கரவு -
எப்படிப்பட்டவரும் இகழ்ச்சிசெய்து
கற்றுக்கொள்ளாத வைகளும் வஞ்சிக்கும்
தொழில்களேயாகும்.
(க - து.) அந்நகரமாந்தர்கள் நல்ல
கல்வியறிவுள்ளோர் ; இரப்பதும், வஞ்சிப்பதும்
இன்னவென்றே அறியாதவர்கள் என்பதாம்.
(வி - ரை.) ‘தெரிவன நூல்’ என்றார்,
அந்நகரமக்கள் யாவரும் கல்வி கேள்விகளிற்
சிறந்தவரென்று குறித்தற்கு. அந்நகரில்
இரப்போரும் வஞ்சித்துப் பொருள் கவருவோரும்
இல்லை என்றார். எல்லா மக்களும் அன்பும் அறனும்
கடைப்பிடித்தொழுகும் நலமிக்கார் என்றவாறாம்.
தெரிவன வினையாலணையும் பெயர். இரவு இரத்தல்,
யாசகம் வாங்குதல். இது மக்கட் பிறப்பின்
மாண்பினைக் கெடுக்கும் தீமையாதலால், அந்நகரில்
இரத்தல் முதலிய இழிந்த நிலை இல்லை யென்பாராய்,
‘இல்லாதனவும் இரவே’ என்றார். இதனைத்
திருவள்ளுவரும் தம் அறப்பெருநூலில், ‘ஒருவனை
இரந்தே வாழும்படி படைப்போன்
படைத்திருப்பானானால், அப்படைப்புக்கடவுள்
இறந்து தொலைக’ என்று கடிந்து பேசுகின்றார்.
அப்பொன்னுரை:
1‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து
கெடுக உலகியற்றி யான்’
என்பதாகும் (16)
அந்நகர் முரணை நகரை ஒத்ததெனல்
24. மானனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடந்தோளான் -
காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.
(இ - ள்.) பார் ஆளும் வேந்தன் பதி -
நிடதநாட்டு மன்னனாகிய நளனுடை மாவிந்த நகரை,
தாமரையாள் வைகும் தடம்
1. திருக் : 1062.
|