தோளான் - திருமகள் வீற்றிருக்கின்ற
உயர்ந்த தோள்களையுடையானும், காமரு பூந் தாரான் -
அழகிய பூமாலையை அணிந்தவனும், மாமனுநூல் வாழ வரு
சந்திரன் சுவர்க்கி - சிறந்த மனுநீதி நூல்
(உலகில்) மேம்பட வந்து பிறந்தவனுமாகிய சந்திரன்
சுவர்க்கி என்பவனது, முரணை நகர்தான் என்று
சாற்றல் ஆம் - முரணையம்பதி போன்றதென்றே இந்
நகரை உயர்த்திச் சொல்லலாம்.
(க - து.) மாவிந்த நகரத்தைச்
சந்திரன் சுவர்க்கியின் முரணை நகரென்றே
சொல்லலாம், என்பதாம்.
(வி - ரை.) இது, நூலாசிரியர் கூறுவது;
வியாசர் கூறுவதன்று. இவரை ஆதரித்துப் புரந்துவந்த
சந்திரன் சுவர்க்கி யென்னும் அரசன் தமக்கு
ஆற்றிய நன்றியை உணர்த்துவதற்கு இதுபோன்று பற்பல
இடங்களில் அவனை இந்நூற்கண் புகழ்ந்து அவன்றன்
பொன்றாப் புகழை உலகினுக்கு எடுத்துக் காட்டி நிலை
நிறுத்துவர். சந்திரன் சுவர்க்கி யென்னும் இவன்,
சோழ நாட்டுச் சிற்றரசன். இவன்றன்
வேண்டுகோட்கிசைந்தே இந் நூலைப் பாடி
அரங்கேற்றினார். இவன் நீதி தவறாது
குடிமக்கள்பால் அன்பு காட்டி நாட்டை ஆண்டான்
என்பதை ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’
என்னும் தொடரினால் காட்டுகின்றார். இவன் இவர்
போன்ற பல புலவர்களை ஆதரித்து வேண்டுவன
நல்கிப்புரந்து வந்த அருளாளன் என்பதைக்
கலிநீங்கு காண்டத்து, நளனைப் பற்றியிருந்த கலி
அறவே நீங்கிச் சென்றுவிட்டதைக் குறித்து
உவமையாக,
‘வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட்
டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி’ (48)
‘சந்திரன் சுவர்க்கி வேந்தனாற்
கொண்டாடப்படுகின்ற பாவலன்பால் நின்ற
பசிப்பிணி அறவே இல்லாமல் போவதுபோல்,
நளவேந்தன்பால் நின்ற கலி நீங்கினான்’ என்று
எவ்வளவு சிறப்பாகத் தம் நன்றி மறவாத
நலத்தையும், தம்மைப் புரந்த அரசன் புகழையும்
நிறுவிக் காட்டுகின்றார்.
இவ்வாறே கம்பநாடரும் தம்மைப் புரந்து
வந்த சடையப்ப வள்ளலைத் தாம் ஆக்கியருளிய
இராமாயணப் பெருங்காப்பியத்தில் இடம் நோக்கி
ஆங்காங்கே அமைத்து அவர்தம் நன்றியைத்
தெரிவித்திருப்பதும் இதனோடொப்பக் காண்க.
|