பக்கம் எண் :

30நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(இ - ள்.) தாது அவிழ் பூ தாரான் - மகரந்தப் பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்த நளமன்னன், மாதர் அருகு ஊட்டும் பைங் கிளியும் - பெண்கள் தம் அருகில் (வைத்துக் கொண்டு பாலும் பழமும்) ஊட்டி வளர்க்கின்ற பச்சைநிறக் கிளியும், ஆடல் பருந்தும் - போராடுகின்ற பருந்தும், ஒரு கூட்டில் வாழ - ஒரே கூட்டிற்குள் (பகைமை நீங்கி) வாழும்படி, சீதம் மதிகுடைகீழ் - குளிர்ந்த தண்நிலவுபோன்ற வெண்கொற்றக்குடை நிழலிடத்து, செம்மை அறம் கிடப்ப - சிறந்த அறங்கள்நிலைத்து நிற்க, உலகு தனி காத்தான் - தான் ஆளுகின்ற நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டுவந்தான்.

(க - து.) நளன், கிளியும் பருந்தும் பகையின்றி ஒரேகூட்டில் வாழுமாறு அறமுறை தவறாமல் அரசாட்சி செய்தான்.

(வி - ரை.) சீதமதி - குளிர்ந்த திங்கள். குடைக்கீழ் - இதிலுள்ள கீழ் என்னுஞ் சொல் அதன் நிழலை உணர்த்திற்று. கிளியும் பருந்தும் ஒரு கூட்டில் வாழ்தலாவது, அவை ஒன்றுக்கொன்று பகைமையுடையன ; இம்மன்னன் ஆட்சிமுறையினால் ஐயறிவுயிரினமான இவைகளே, பகையின்றி வாழ்வதாயின், ஆறறிவு படைத்த மக்களானவர் மனமொத்து வாழ்தல் சொல்லவேண்டா என்னும் குறிப்புத் தோன்றக் கூறியதை நோக்குக. இவ்வாறே இளங்கோவடிகளும் பாண்டிய மன்னர்தம் செங்கோற் சிறப்பைக் கூறப் போந்தகாலை,

1‘அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு’

என அருளியதும், கம்பநாடர் தசரதமன்னன் நெறிதவறா ஆட்சியைச் சிறப்பிக்குங்கால்,

2‘வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன்
தள்ளரும் பெரும்புகழ்த் தசரதன்’

என்று அருளியதும் இதனோடு ஒத்த கருத்தாதலை அறிக. தனிக்காத்தல் - தன்னாவார் பிறரின்றித் தாமே காத்தல் என்பதாம். பசுமை+கிளி - பைங்கிளி எனவந்தது, பண்புப் பெயராகலான் என்க. (19)

1. சிலப்: 13 : 7-9. 2. கம்பராமா, பால, அரசியற்: 6.