நளன், பூங்காவனத்துக்குச் சென்றான்
எனல்
27. வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான்--தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூநாடிச் சோலை புக.
(இ - ள்.) தேம் குவளை தேன் ஆடி வண்டு
சிறகு உலர்த்தும் நீர்நாடன் - இனிமையுள்ள
குவளைமலரின் தேனில் குளித்து முழுகி எழுந்து
வண்டுகள் தம் சிறகுகளை உலர்த்துகின்ற நீர்வளம்
பொருந்திய நிடதநாட்டு மன்னனான நளன், பூநாடி
சோலை புக - பூக்கள் கொய்துவர விரும்பிச்
சோலைக்குட் செல்லுங்கால், வாங்கு வளை கையார்
வதனமதி பூத்த - வளைவான வளையலை யணிந்த மகளிரின்
முகமாகிய நிலவினிடத்து மலர்ந்துள்ள, குவளை பூ காடு
இடையே போயினான் - (கண்களென்னும்) நீல
மலர்க்கூட்டத்தின் நடுவிலே சென்றான்.
(க - து.) நளன், பெண்களின் கண்கள்
தன் அழகையே விரும்பிப்
பார்த்துக்கொண்டிருக்கப் பூங்காவனம் நோக்கிச்
சென்றான் என்பதாம்.
(வி - ரை.) வாங்குவளை - விலைகொடுத்து
வாங்குகின்ற வளை எனவும், காதலால் உடலுறுப்புகள்
மெலிய அதனால் கழன்று விழுகின்ற வளை எனவும்
பொருள் கூறலுமாம். காதல் மிகுதியால் வளைகள்
கழன்றுவிழுமென்பதைத் திருவள்ளுவர் ‘உறுப்பு நலன்
அழிதல்’ என்னும் அதிகாரத்தில்,
1‘பணைநீங்கிப் பைந்தொடி சோரும்
துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்’
என, அருளுதலுங் காண்க. நளன் அழகில்
ஈடுபட்டு இமை கொட்டாமல் விழித்தகண்
விழித்தபடியே நிற்கும் இளநங்கையர் தம் கண்களை
‘வதன மதி பூத்த பூங்குவளைக் காடு’ என்றார்.
கருங்குவலை நீரினன்றி நிலவிடத்தும் பூத்தன வென்று
வியப்பணி தோன்றவுரைத்தார்.
குவளைமலர்த்தேனை வண்டுகள் உண்டு மயங்கி
மேலெழுந்து சிறகுலர்த்தும் என்றதனால் நிடதநாட்டு
நீர்வளனும் நிலவளனும், இவ்வளங்களால் நாட்டுச்
செல்வவளனும் குறித்தனரென்க. வண்டுகள் தேனுண்டு
முழுகும் என்பதைச் சேக்கிழார் தடுத்தாட்கொண்ட
புராணத்தில்,
1. திருக் : 1234.
|