1‘...குண்டகழ்க் கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனியவாகித்
தூய நீறுபுனை தொண்டர்கள் என்ன’
என்று அருளியதும் இக் கருத்துடன் ஏற்ற
பெற்றி அமைந்திருத்தல் காண்க. குவளை - உவம
ஆகுபெயராய்க் கண்களைக் குறித்தது. பார்வை
நளன்மேற்பட்டு விலகாமல் இருப்பதைக் காடு என்று
வியப்புப்பெறக் குறித்தார். போயினான் -
சென்றான். இறந்தகால வினையாலணையும் பெயர். இது,
நாடனென்னும் எழுவாய்க்குப் பயணிலையாய் வந்தது.
(20)
நளன் சென்ற காலம் இளவேனில் எனல்
28. வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனல் மீதலரும் தாழ்வரைசூழ் நாடற்
கிளவேனில் வந்த தெதிர்
(இ - ள்.) நின்ற தளவு ஏனல்மீது
அலரும் - (முல்லை நிலத்தில்) வளர்ந்த
முல்லைக்கொடி பற்றிப் படர்ந்து (குறிஞ்சி
நிலத்தில் வளர்ந்துள்ள) தினைத்தட்டையின்மீது
மலர்கள் பூக்கின்ற, தாழ்வரை சூழ் நாடற்கு எதிர் -
மலைச்சாரல் சூழ்ந்த நிடதநாட்டு மன்னனாகிய
நளனுக்கு எதிரில், வென்றிமதவேள் தன் வில் எடுப்ப
- மன்மதனானவன் வெற்றிமிக்க தன் (கருப்பு)
வில்லைத் தாங்கி வரவும், தென்றல் வீதிஏலாம்
மதுநீர் தெளித்துவர - தென்றற் காற்றானது
தெருக்கள்தோறும் மலர்த்தேனாகிய நீரைச்
சிதறிக்கொண்டு வரவும், இளவேனில் வந்தது -
இளவேனிற் பருவம் வந்துற்றது.
(க - து.) மன்மதன், தன்
வில்லெடுத்தும், தென்றல், நீர்தெளித்தும்வர,
இளவேனிற் பருவமானது நளமன்னனை எதிர்கொண்டு
வந்தது என்பதாம்.
(வி - ரை.) வென்றி - வெற்றி : இங்கே
மெலிந்து நின்றது. இளவேனிற் காலத்தில் மரஞ் செடி
கொடிகள், தளிர்த்து அரும்பு கொண்டு மலர்வது
இயற்கை. அம் மலர்களிலுள்ள தேன்களைச் சிறு சிறு
துளிகளாகச் சிதறித் தென்றல் எங்கும்
பரப்புவதும், அக்காலத்துப் பருவம் வாய்ந்த
ஆடவர்க்கும் மகளிர்க்கும் காதல்
கைம்மிகுமாகலின், அக் காதற் கடவுள் மன்மதன்
காலத்துக்
1. பெரியபுரா, தடுத்தாட்: 96.
|