தன் கால்களின் செந்நிற
மிகுதியினால் அங்குள்ள தடாகத்தின் நீருள்ள
இடமெல்லாம் செந்நிறமாகக் காட்டவும்,
தோன்றிற்று - அங்கு வந்தது.
(க - து.) அச்சோலையிடத்தே
அங்குள்ள தாமரை மலரில் வாழும் அன்னப் பறவை
நளனுக்கு முன் தோன்றிற்று என்பதாம்.
(வி - ரை.) நீள் நிறம் :
வினைத்தொகை. தாள் நிறம்: ஆறாம் வேற்றுமைத்
தொகை. அன்னத்தின் உடலின் வெண்ணிற ஒளியும்,
கால்களின் செந்நிற ஒளியும் சோலையை
வெண்ணிறமாகவும், நீர்நிலையைச் செந்நிறமாகவும்
மாற்றிற்று. அதன் வெண்ணிறமும் காலின்
செந்நிறமும் விளங்குதல் காண்க. அஃதாவது
அன்னத்தின் சிறப்புக் கூறியவாறு. முளரி -
முட்களையுடையதென்னும் பொருளாய்த் தாமரை மலரைக்
குறித்தது: ஆகுபெயர். நிறத்தான்-மார்பையுடையான்
என்று கூறலுமாம். அப்பு - நீர் : தொட்டால்
ஒட்டுதலையுடையதென்பது பொருள். ‘உள்’-, ஏழாம்
வேற்றுமை இடப்பொருளுருபு, பிறிதின் கிழமைப்
பொருளில் வந்தது. (23)
நளன், அன்னத்தைப் பிடிக்கச் சேடி
ஒருத்தியை ஏவுதல்
31. பேதை மடவன்னம் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழும் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து.
(இ - ள்.) மேதி குலம் ஏறி - எருமை
மந்தை (கொல்லைகளில்) சென்று, மென் கரும்பை
கோதி கடித்து - மெல்லிய கரும்புகளைக் கடித்துக்
குதப்பி, முத்து உமிழும் (அவைகளுக்குள் இருக்கின்ற)
முத்துக்களைக் கக்குகின்ற, கங்கை நீர் நாடன் -
கங்கை நீர் வளமிக்க நிடத நாட்டி மன்னனாகிய
நளன், பேதை பெயர்ந்து - (சேடி ஒருத்தியைப்
பார்த்து) ஏ, பேதாய்! நீ போய், மட அன்னம் தன்னை
பிழையாமல் பிடித்து தா என்றான் - இவ்விள
அன்னத்தை தப்பிப்போக விடாமல் பிடித்துக்
கொண்டு வந்து கொடு என்றான்.
(க - து.) நளன், தன்
பக்கத்திலிருந்த சேடி ஒருத்தியை நோக்கி, ‘இந்த
இள அன்னத்தைத் தப்பாமற் பிடித்துக் கொண்டு
வந்து கொடு’ என்றான்.
(வி - ரை.) பேதை: அண்மைவிளி
யாகலான் இயல்பாயிற்று.
|