பக்கம் எண் :

36நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

1‘ அண்மையின் இயல்பும் ஈறழிவும் சேய்மையின்’

என்னும் நன்னூல் விதி காண்க. மேதிக்குலம் - எருமை மாட்டுக் கூட்டம். நீர் வளத்தால் கரும்புகள் வளர்ந்து செழித்துள்ளன ; அவைகளை எருமைகள் மென்று தின்னும்போது அவைகளின் கணுக்களிலிருந்து முத்துக்கள் உதிர்கின்றன. எனவே, கரும்பு மிகச் செழிப்புடன் வளர்ந்துள்ள நிலையைக் காட்டுகின்றது. முத்துக்கள் இருபது இடங்களிற் பிறப்பதாக இந் நூலாசிரியர் அருளிய ‘இரத்தினச் சுருக்கம்’ என்னும் நூலால் அறியக்கிடக்கின்றது. ஆதலால், ‘முத்துமிழும்’ என்றார். அரசன் செங்கோல் முறையினால் நாடு செழிப்ப மழை பெய்து விளைவு மல்கும் திருநாடு என்பாராய்க், ‘கங்கை நீர் நாடன்’ என்றார். அரசன் செங்கோன் முறையினால் மழைபெய்யுமென்பதை,

2‘மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்’

எனச் சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்வன் கூற்றாக இளங்கோவடிகள் அருளுமாற்றால் அறியப் பெறும். (24)

சேடிகள், அன்னத்தைப் பிடித்துவந்து அரசன்முன்
வைத்தார் எனல்

32. நாடிமட அன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

(இ - ள்.) நீடிய நல் பைங்கூந்தல் வல்லியர்கள் - நீண்டு நன்றாய்ச் செழித்து வளர்ந்த கூந்தலையுடைய பூங்கொடியொத்த சேடியர்கள், நாடி - (அவ்வன்னத்தைப் பிடிக்க) விருப்பமுற்று, மட அன்னத்தை நல்ல மயில்குழாம் ஓடி வளைக்கின்றது ஒப்ப - அந்த இள அன்னத்தை அழகான மயிலின் கூட்டங்கள் ஒன்றுபட்டு ஓடிச் சென்று வளைப்பதுபோல் வளைந்து, பற்றிக்கொடு போந்து - பிடித்துக் கொண்டு வந்து, தம் கோவின்முன் தாம்ந்து வைத்தார் - தம் வேந்தனாகிய நளனுக்கு முன்பாக வணங்கி நின்று வைத்தார்கள்.

1. நன்னூல்: 313. 2. சிலப்பதி, 25: 100-4.