பக்கம் எண் :

மூலமும் உரையும்37

(க - து.) மயிலின் கூட்டங்கள் ஒன்றுகூடி வளைப்பதுபோல் அன்னத்தை வளைந்து பிடித்துத் தம் வேந்தன் முன் வணங்கி நின்று வைத்தார்கள் என்பதாம்.

(வி - ரை.) பறவையைப் பிடிப்பார் மற்றொரு பறவையைக் கொண்டே பிடிப்பார் ஆகலான், மயிற் பறவையின் சாயல் படைத்த மெல்லியலார், அன்னப் பறவையைப் பிடித்துக்கொண்டு வந்தனர் என்னும் நயந்தோன்றுதல் காண்க. அம்மங்கையர் அன்னத்தைப் பிடிக்கங்கால் கூந்தல் அவிழ்ந்து தொங்கி அசைய ஆடைகள் குலைய இடை நுடங்க ஓடிப் பிடித்தார்களாதலின், ‘பைங்கூந்தர் வல்லியர்கள்’ என்று குறித்தார். அரசர் முன்னிலையிற் பணிசெய்வோர் அஞ்சி ஒடுங்கிப் பணி புரியவேண்டுமாதலால் ‘ தாழ்ந்து வைத்தா ’ரென்றார். வல்லிக்கொடி போன்ற பெண்களை வல்லி என்றது, ஆகுபெயர். புகுந்து - போந்து என மரூஉ மொழியாயிற்று. கொண்டு என்பது, கொடு என இடைக் குறைந்து நின்றது. அரசன், ஒருத்திக்கு அன்னத்தைப் பிடித்துக் கொணரும்படி கட்டளையிட்டான். ஆயினும் அவன்றன் அருளைப்பெறும் பொருட்டுச் சேடிப்பெண்கள் பலர் சென்று அன்னத்தைப் பிடித்தனர் என்க. (25)

அரசனைக்கண்டு அன்னம் அஞ்சி வருந்துதல்

33. அன்னம் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே - அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.

(இ - ள்.) ஆய் இழையார் - ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த சேடிப்பெண்கள், அன்னம் த(ன்)னை பிடித்து அங்கு கொண்டுபோய் - அன்னத்தை அங்கே பிடித்துக்கொண்டு சென்று, மன்னன் திருமுன்னர் வைத்தலும் - அரசனுடைய முன்னிலையில் வைத்தவுடனே, அன்னம் -, தன் உடைய வான்கிளையைத் தேடி மலங்கிற்று - தன்னுடைய சுற்றமாகிய மற்ற அன்னங்களைக் காணாமல் தேடி வருத்தமுற்று, மன்னவனைக் கண்டு கலங்கிற்று - அரசனைப்பார்த்து மனக்கலக்கம் கொண்டது.

(க - து.) அன்னப் பறவையைச் சேடிகள் பிடித்துக் கொண்டுபோய் அரசன்முன் வைத்தலும் அது தன் கிளையைத் தேடி வருந்தி அரசனைக்கண்டு அஞ்சி மயங்கிற்று என்பதாம்.